புத்தக பையில் அரிவாள்.. பரிதாபத்தில் பள்ளிக் கல்வித் துறை! எங்கே போகிறது தமிழ்நாடு? பறந்த கண்டனம்!
சென்னை: நெல்லையில் சக மாணவரை எட்டாம் வகுப்பு மாணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது நல்லதல்ல என கூறியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகம் எங்கே போகிறது? என வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை எங்கே தான் போகிறது என்பதுதான் பெற்றோரின் கேள்வியாக இருக்கிறது. பள்ளியில் ஆசிரியர்கள் தாக்கப்படுவது, சாதி ரீதியான வன்கொடுமை சம்பவங்கள் வரிசையில் மாணவர்களுக்கு உள்ளேயே தாக்கி கொள்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.
கூடுதல் அதிர்ச்சியாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சக மாணவனை அரிவாளால் வெட்டி இருக்கிறார். வஉசி மைதானம் அருகே இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு பாட ஆசிரியை ரேவதி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு மாணவனுக்கும், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஒரு மாணவனுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால ஆத்திரமடைந்த ஒரு மாணவன் தனது பையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து மற்றொரு மாணவனை சரமாரியாக வெட்டினார். அதில் கை, தோள்பட்டை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு விழுந்து நிலையில் தடுக்க முயன்ற ஆசிரியையையும் வெட்டியுள்ளார். வெட்டிவிட்டு அரிவாளுடன் அந்த மாணவன் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கும் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் காயமடைந்த ஆசிரியை மற்றும் மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த இரு மாணவர்களுக்கிடையே ஏற்கனவே பிரச்சனை இருந்ததாகவும் அதன் காரணமாகவே தற்போது இந்த தாக்குதல் நடந்துள்ளதாக போலீசார் கூறியிருக்கின்றனர். இந்நிலையில் கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது நல்லதல்ல என கூறியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகம் எங்கே போகிறது? என வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ் மேரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது நல்லதல்ல.
இரு மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்குவதில் தான் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது மறந்து, கடந்து போக வேண்டிய மோதல் தான். ஆனால், அதற்கான அரிவாளை வீட்டில் இருந்து பையில் மறைத்து எடுத்து வந்து சக மாணவரை வெட்டும் அளவுக்கு ஒரு மாணவரின் மனநிலை வெறுப்படைந்திருக்கிறது என்றால், அது மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்திலும் அதிகரித்து வரும் சீரழிவையே காட்டுகிறது. இந்தப் போக்கு சரி செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நாங்குநேரியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர் சின்னத்துரை வீடு புகுந்து வெட்டப்பட்டது, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் பேருந்தை மறித்து அதில் பயணம் செய்த மாணவர் வெட்டப்பட்டது என வன்முறை நிகழ்வுகள் தொடர்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது.
மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களுக்கு நல்வழி காட்டுவது தான் பள்ளிகள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகும். இதை மனதில் கொண்டு பள்ளிகளில் நீதிபோதனை பாடவேளைகளை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும்; விளையாட்டுப் பாடவேளையை அதிகரிக்க வேண்டும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications