தமிழக உயர்க்கல்வித்துறையில் நிதி நெருக்கடி..? அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு..!
சென்னை: கல்லூரி பேராசியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நிதி நெருக்கடியை காரணம் காட்டி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதை காலம் தாழ்த்தக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பதவி உயர்வு
தமிழ்நாடு அரசு கலை - அறிவியல் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அனைத்துத் துறை பணியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில், அறிவை வளர்க்கும் பணியைச் செய்யும் ஆசிரியர்களுக்கு மட்டும் அதை மறுப்பது நியாயமற்றதாகும்.

என்ன தகுதி?
அரசு கலைக்கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அதிகபட்சமாக இணைப் பேராசிரியர் நிலை வரையிலும், பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பேராசிரியர் நிலை வரையிலும் பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்றன. பதவி உயர்வுக்கான தகுதிகள் இரு தரப்புக்கும் பொதுவானவை தான். 2007, 2008, 2009-ஆம் ஆண்டுகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு இப்போது இணைப் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவர்களில் எவருக்கும் இரண்டாவது தர ஊதிய உயர்வு கூட வழங்கப்படவில்லை.

வழிகாட்டி
அதன்பின் பணியில் சேர்ந்த உதவிப் பேராசிரியர்களுக்கும் இதே நிலை தான். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக கடுமையான பொருளாதார இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர். பொருளாதார இழப்பு மட்டுமின்றி, கல்வி சார்ந்த இழப்புகளும், உலகளாவிய கற்றல்-கற்பித்தல் அனுபவ இழப்புகளும் அவர்களுக்கு ஏற்படுகின்றன. ஓர் உதவிப் பேராசிரியர் அதிகபட்சமாக ஒரு நேரத்தில் 4 பேருக்கு மட்டும் தான் முனைவர் பட்ட வழிகாட்டியாக இருக்க முடியும். ஆனால், இணைப் பேராசிரியராக 8 பேருக்கும், பேராசிரியராக 12 பேருக்கும் முனைவர் பட்டத்திற்கு வழிகாட்ட முடியும்.

நிதி நெருக்கடி
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் அத்துடன் இணைந்த தர ஊதிய உயர்வு வழங்கப்படாததற்கு நிதி நெருக்கடி தான் காரணம் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, பிற அரசுத்துறையினருக்கான பதவி உயர்வுகள் மறுக்கப்படாத நிலையில், கல்லூரி பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு மட்டும் காலந்தாழ்த்தப்படுவதற்கு காரணம் அதற்கான நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள் தான்.

சரி செய்க
பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, பல்கலைக்கழகங்களில் பணி மேம்பாட்டுத் திட்டக்குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து தீர்மானிக்கும். கல்லூரிகளைப் பொறுத்தவரை மண்டல இணை இயக்குனர் இது பற்றி முடிவெடுப்பார். ஆனாலும், கடந்த ஐந்தாண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாதது பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இது சரி செய்யப்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications