ஆந்திரா தொழிற் பூங்கா பிளான் சென்னை அருகில்? ரூ.15 லட்சத்திற்கு ஏக்கர் நிலம்.. திடுக் பின்னணி என்ன
சென்னை: சென்னைக்கு அருகில் ஆந்திர அரசு 2,000 ஏக்கரில் புதிய தொழில் பூங்காவை அமைத்து வருவது தமிழக தொழில் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது... குறைந்த விலையில் ஏக்கர் நிலம் வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளதால், தமிழக நிறுவனங்கள் அண்டை மாநிலத்தை நோக்கி ஈர்க்கப்பட்டு வருவதாக தகவல்கள் வட்டமடிக்கின்றன..!!
சென்னை அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் பகுதியில், ஆந்திர மாநில அரசு 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்டமான தொழில் பூங்காவை உருவாக்கி வருகிறது.

திருத்தணி கனகம்மாசத்திரம்
அங்கு தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் வெறும் 15 லட்சம் ரூபாய்க்கு வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளதோடு, தமிழகத் தொழில் நிறுவனங்களுக்கு நேரடி அழைப்பும் விடுத்துள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழக தொழில் துறையினர் மத்தியில் பெரும் விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக தொழில் துறை வட்டாரங்கள் தரப்பில் சொல்லும்போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பல்வேறு தொழில்நுட்பத் துறைகளில் ஈடுபட்டுள்ள பல முன்னணி நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பணிகளை விரிவுபடுத்தும் நோக்கில் மேற்கண்ட மாவட்டங்களிலேயே புதிய இடங்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றன.
ஆனால், அந்த மாவட்டங்களில் நிலத்தின் மார்க்கெட் மதிப்பு எக்கச்சக்கமாக அதிகமாக உள்ளதுடன், தொழிற்துறைக்கு தேவையான அளவில் பெரிய நிலப்பரப்பும் எளிதில் கிடைப்பதில்லை.
ஆந்திர அரசு தொழில் பூங்கா
இந்த நிலவரத்தைதான் ஆந்திர அரசு மோப்பம் பிடித்துவிட்டது.. உடனே எப்படியாவது தமிழகத்தின் வளர்ந்து வரும் தொழில் நிறுவனங்களை தங்கள் மாநிலத்திற்கு ஈர்க்கவும் ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.. இதற்காக, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள முக்கிய தொழில் துறையினரை தனித்தனியாக நேரில் சந்தித்து ஆந்திர அரசு அதிகாரிகள் பேசி வருவதாக தெரிகிறது.
தமிழக எல்லையை ஒட்டியுள்ள ஆந்திரப் பகுதியில் முதலீடு செய்தால் அதிகப்படியான வரி சலுகைகளும், மிகக் குறைந்த விலையில் நிலமும் வழங்கப்படும் எனக்கூறி ஒவ்வொரு நிறுவனத்தினரிடமும் வலை விரித்து வருகிறார்களாம்..
ஏக்கர் ரூ.15 லட்சம்
இப்போது சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரத்தில் இருந்து வெறும் 10 கிலோமீட்டர் தொலைவிலேயே ஆந்திர எல்லைக்குள் கோசல்நகரம் அமைந்துள்ளது. அந்த பகுதியில் தான் 2 ஆயிரம் ஏக்கரில் மாபெரும் தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருவதாகவும், அங்குத் தொழில் தொடங்குவோருக்கு ஏக்கர் 15 லட்சம் ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் ஆந்திர அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையை சமாளிக்க வேண்டுமானால், தமிழக அரசும் உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டும். சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் புதிய தொழில் பூங்காக்களையும் தொழிற்பேட்டைகளையும் தமிழக அரசே விரைவாக உருவாக்கி, தொழில் நிறுவனங்களுக்கு தங்குதடையின்றி குறைந்த விலையில் நிலம் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் தமிழகத்தின் முக்கிய முதலீடுகள் மற்றும் பல முன்னணி நிறுவனங்கள் அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு செல்லும் அபாயம் ஏற்படும் என்றும் தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்...!!


Click it and Unblock the Notifications
