“ஆணவம் அழிவிற்கு வழி!”.. அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை: முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸார் கைது செய்துள்ளனர். அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆணவம் அழிவுக்கு வழி என்றும், சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது 'Take Diversion' அரசு.

தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?. சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத 'தூயசக்தி ஆட்சி', அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?. அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?.
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர். "ஆணவம் அழிவிற்கு வழி!"














Click it and Unblock the Notifications