கடைசி நேரத்தில் அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு நோ சொன்ன போலீஸ் - உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி
சென்னை: அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கடைசி நேரத்தில் போலீஸ் அனுமதி மறுத்திருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அவர் பேசியதாவது, "இன்று அனிதாவின் நினைவுநாள். சட்டமன்றத்தில் அனிதாவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கிறோம். அதேபோல தமிழ்நாடு மாணவர், இளைஞர் கூட்டமைப்பு சார்பாகவும், அனிதாவின் குடும்பத்தினர் சார்பாகவும் அனிதாவினுடைய 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

அரசியல் சார்பற்ற நிகழ்ச்சி
எந்த அரசியல் சார்பும் இல்லாமல் நடத்த இருந்த அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு இந்த அரசு, சென்னை மாநகர காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. நினைவேந்தல் நடத்த அனுமதி கேட்டு 15 நாட்களுக்கு முன்பாகவே கடிதம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், காவல்துறை இந்த நிகழ்ச்சியை ஆர்ப்பாட்டம் என்று சொல்லி அனுமதி மறுத்திருக்கிறார்கள். அனிதாவின் சகோதரர் மணிரத்னம் என்னை சந்தித்து நினைவேந்தல் தொடர்பான கோரிக்கையை வைத்திருந்தார்.
அனுமதி ஏன் வழங்கவில்லை?
நீட் கொடுமையால் இந்தியாவில் நடந்த முதல் மரணம், அனிதாவின் மரணம்தான். இந்த சம்பவத்தின்போது முதலமைச்சர் விஜய் அனிதாவின் வீட்டிற்கே சென்று துக்கம் விசாரித்திருந்தார். எங்களது தலைவரும் சென்றிருந்தார். இன்று ஆளுங்கட்சி நீட்டை ஒழிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்கள். இப்படி இருக்கையில் ஜனநாயக ரீதியில் நடக்க இருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு இந்த அரசு ஏன் அனுமதி கொடுக்கவில்லை? அனுமதி வழங்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
ஆதவ் அர்ஜுனா விளக்கம்
இதற்கு விளக்கமளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தமிழ்நாடு மாணவர், இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் பஷீர் என்பவர் அனிதாவின் நினைவேந்தல் கூட்டத்தை நடத்த விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலனை செய்ததில்.. 29-08-2026 முதல் 08-09-2026 பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா நடைபெறுவதால் பெருமளவில் பக்தர்கள், வாகனங்கள் பெசன்ட் நகருக்கு வரும் என்பதாலும், மீனவர்கள் வசிக்கும் பகுதியில் எல்லையம்மன் கோயில் திருவிழா நடப்பதாலும்.. சட்டம் ஒழுங்கு மற்றும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
வேறு இடத்தில் அனுமதி
இது குறித்து விண்ணப்பத்தாரருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே வேறு இடத்தில் நினைவேந்தல் நடத்தினால்.. அரசு அதற்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். இதில் எந்த அரசியலும் இல்லை. அதேபோல இன்று ஒரு நாளாவது அரசியல் பேசாமல்.. எல்லோரும் ஒரே குரலில் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள்" என்று கூறினார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினார்.
உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "இதை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. பெசன்ட் நகர் மாதா கோயில் திருவிழா, திருத்தேர் அன்றைக்கும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால்தான் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கொடியேற்றம் கடந்த வாரம் முடிந்துவிட்டது. இனி செப்.7-8ம் தேதிதான் திருவிழாவும், திருத்தேர் விழாவும் நடக்க இருக்கிறது. இன்றைய தினம் அங்கு மக்கள் கூட்டம் குறைவாகத்தான் உள்ளது.
எனவே அந்த பகுதியில் அனுமதி தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இல்லை எனில், விண்ணப்பதாரரிடம் தெரிவித்து.. மாற்று இடத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என வலியுறுத்தியிருந்தார். இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் ஓகே தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications
