டெங்குவை விட கொடூரம்.. சென்னை மாணவர் உயிரை பறித்த உண்ணிக் காய்ச்சல்! இந்த அறிகுறிகளை கவனிங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ஸ்க்ரப் டைபஸ் எனப்படும் உன்னி பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. பொதுவாக பருவமழை காலத்தில் டெங்கு பாதிப்பு குறித்தே மக்கள் அதிகம் கவலைப்படும் நிலையில், இந்த பாக்டீரியா தொற்று இப்போது பேசுபொருளாகியுள்ளது. இந்த உன்னி காய்ச்சல் ஏன் ஆபத்தானது.. இதன் அறிகுறிகள் சிகிச்சை குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வந்த 20 வயதான ஹரிஷ், கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். அவருக்கு சமீபத்தில் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

Anna University fever dengue

மாணவர் உயிரிழப்பு

இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் அங்கு வெள்ளிக்கிழமை அவர் உயிரிழந்தார். ஹரிஷுக்கு டெங்கு பரிசோதனை நெகடிவ் என வந்த நிலையில், அவருக்கு ஸ்க்ரப் டைபஸ் எனப்படும் உன்னி காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது. என்செபலோபதி, கடுமையான சுவாச கோளாறு மற்றும் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்டதும் தெரிய வந்தது.

இந்த ஆண்டு சென்னையில் பதிவான முதல் ஸ்க்ரப் டைபஸ் மரணம் இதுவாகும். இதுவரை 173 பேருக்கு இந்த பாதிப்பு உறுதியாகியுள்ளதாகவும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஸ்க்ரப் டைபஸ் கொசுக்கள் மூலம் பரவும் நோய் அல்ல என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

உன்னி காய்ச்சல் என்றால் என்ன?

Orientia tsutsugamushi என்ற பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுதான் ஸ்க்ரப் டைபஸ். டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்களைப் போல இது கொசுக்கள் மூலம் பரவுவதில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட லார்வா நிலையில் உள்ள சிறிய பூச்சிகளான மைட்கள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு தொற்று ஏற்படுகிறது. இந்த பூச்சிகள் அடர்ந்த தாவரங்கள், அதிகமாக வளர்ந்த புற்கள், புதர்கள், விவசாய நிலங்களில் அதிகம் காணப்படுகின்றன. எலிகளும் இந்த பூச்சிகளுக்கு இயற்கையான வாழிடமாக இருப்பதால் இவை வேகமாக பரவும் ஆபத்து இருக்கிறது.

இந்தியா உள்ளிட்ட தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஸ்க்ரப் டைபஸ் காணப்படுகிறது. வெப்பமண்டல பகுதிகளில் ஆண்டு முழுவதும் பாதிப்பு ஏற்படலாம் என்றாலும் பருவமழை காலத்திலும் அதற்கு பிறகும் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும். முன்பு இந்த பாதிப்பு கிராம புறங்களிலேயே அதிகம் ஏற்பட்ட நிலையில், இப்போது நகரங்களிலும் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

முக்கிய அறிகுறிகள் என்ன?

பாதிக்கப்பட்ட பூச்சிகள், அதாவது மைட்கள் கடித்ததிலிருந்து பொதுவாக ஒரு வாரம் முதல் 3 வாரங்களுக்குள் அறிகுறிகள் தோன்றலாம். முக்கியமாக காய்ச்சல், குளிர், தலைவலி, உடல்வலி மற்றும் கடுமையான சோர்வு, வயிற்றில் அசௌகரியம் ஏற்படலாம். மேலும், மைட் கடித்த இடத்தில் சிரங்கு உருவாகலாம். இது சிகரெட் தீக்காயத்தை போன்ற தோற்றத்தில் இருக்கும். அக்குள், இடுப்பு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் இது காணப்படும் ஆனால், ஸ்க்ரப் டைபஸ் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த அறிகுறி தோன்றாது என்பதால் கவனம்.

சிலருக்கு உடலில் தடிப்புகளும் ஏற்படலாம். நோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், நிமோனியா, மூளையழற்சி, சிறுநீரக பாதிப்பு, சுவாச கோளாறு மற்றும் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழப்பு உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்படலாம்.

அறிகுறிகள்

ஸ்க்ரப் டைபஸின் அறிகுறிகள் டெங்கு, மலேரியா காய்ச்சல் நோய்களின் அறிகுறிகளை போலவே இருப்பதால், இதை கண்டறிவது கடினமாக இருக்கிறது. இதனால் தக்க நேரத்தில் இந்த பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை தர முடிவதில்லை. இதுவே உன்னி காய்ச்சலை கொடூரமானதாக மாற்றுகிறது. ரத்த பரிசோதனைகள் மூலமாக மட்டுமே இந்த தொற்றை உறுதி செய்ய முடியும் என்பதால் இதை கண்டறிவதில் சிரமம் இருக்கிறது.

தடுப்பூசி இல்லை

இந்த உன்னி காய்ச்சலை தடுக்க இப்போது நம்மிடையே தடுப்பூசி எதுவும் இல்லை. எனவே, பாதிக்கப்பட்ட மைட்களுடன் தொடர்பு ஏற்படுவதை தவிர்ப்பதே முக்கியமான தடுப்பு நடவடிக்கையாகும். அடர்ந்த தாவரங்கள் உள்ள பகுதிகளுக்கு செல்லும்போது முழுக்கை ஆடைகள், பேண்ட் அணிய வேண்டும். வீடுகளைச் சுற்றியுள்ள புல் மற்றும் புதர்களை வெட்டி சுத்தமாக வைத்திருப்பது, சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பது, எலிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது ஆகியவையும் உதவும்.

என்ன செய்ய வேண்டும்

காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால்.. அதுவும் விவசாய நிலம் அல்லது அடர்ந்த தாவரங்கள் உள்ள பகுதிகளுக்கு சென்ற பிறகு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்லவும். மருத்துவரிடம் அந்த தகவலையும் மிக தெளிவாக தெரிவிப்பது முக்கியம். அப்போது தான் உன்னி காய்ச்சல் இருக்கிறதா என்பதை பரிசோதித்து, மருத்துவர்கள் தேவையான சிகிச்சையை தொடங்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+