பாஜகவுக்கு எதிரான ஆட்டத்தை தொடங்கிய அண்ணாமலை.. கன்னியாகுமரியில் நடக்கும் மெகா சம்பவம்!
சென்னை: வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை படிப்படியாக பாஜகவுக்கு எதிரான விமர்சனத்தை அதிகரிக்கும் நோக்கில் இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிரான குளறுபடிகளில் மத்திய அரசை சாடிய அண்ணாமலை, கன்னியாகுமரியில் நடக்கும் மாநாட்டில் பாஜகவை அடுத்த கட்டத்திற்கு சென்று விமர்சிப்பார் என்று சொல்லப்படுகிறது.
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, தற்போது வி தி லீடர்ஸ் என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறார். இந்த அமைப்பில் சுமார் 20 லட்சம் பேர் வரை உறுப்பினர்களாக இணைந்திருக்கின்றனர். இதையடுத்து முதற்கட்டமாக போதையில்லா பொள்ளாச்சி என்ற மாநாட்டை பொள்ளாச்சியில் அண்ணாமலை நடத்தினார். இதில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இதன்பின் அண்ணாமலை அடுத்தக் கட்டமாக கன்னியாகுமரியில் என் குமரி பசுமை குமரி என்ற பெயரில் ஒரு மாநாட்டை திட்டமிட்டுள்ளார். இந்த மாநாடு ஆகஸ்ட் 2ஆம் தேதி நடக்க இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் வழக்கமாக பாஜகவுக்கு அமைப்பு ரீதியாக வலிமையுடன் இருக்கும் பகுதி. அங்கு அண்ணாமலை மாநாடு நடத்தவிருப்பது பாஜகவின் அடி மடியில் கை வைப்பதை போல் பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த மாநாட்டுக்காக வி தி லீடர்ஸ் அமைப்பினர் ஒவ்வொரு கிராமமாக சென்று ஆதரவு கோரி வருகின்றனர். மறுபக்கம் பாஜக தரப்பில் அண்ணாமலைக்கு ஆதரவு கொடுக்க கூடாது என்று கேன்வாஷ் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். இதனிடையே அண்ணாமலை கன்னியாகுமரியில் பாஜகவுக்கு எதிராக பொங்குவார் என்றும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பாஜகவை நேரடியாகவே சாடி இருந்தார் அண்ணாமலை. இதுவே பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் அண்ணாமலை தரப்புக்கும் நல்ல ஆதரவு கிடைத்தது. இதனால் அடுத்தடுத்த மாநாடுகளில் பாஜகவை கூடுதலாக நெருக்க அண்ணாமலை திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது.
தமிழக பாஜகவில் இருக்கும் பிரச்சனை, பாஜகவின் திட்டங்களையும் விளாச வாய்ப்புகள் உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். தேசிய கட்சிகளை விளாசிவிட்டு தான் கொஞ்சம் நிதானமாக மாநில கட்சிகளை விமர்சிக்க திட்டமிட்டுள்ளார். தற்போதுதான் சட்டசபைத் தேர்தல் முடிவடைந்திருப்பதால், காலம் கனியட்டும் என்று காத்திருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications
