"உங்களுடன் ஸ்டாலின் முகாமா? ஒரு நாளில் ஒன்றும் ஆகிவிடாது!" துரைமுருகன் பதிலுக்கு அண்ணாமலை கண்டனம்
சென்னை: அரசுப் பள்ளிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமை நடத்தி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் "ஒரு நாளில் ஒன்றும் ஆகிவிடாது" என கூறியிருப்பதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர், சூரை, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளிலும், குமணந்தாங்கல் அரசுப்பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி மீண்டும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு.

ஏற்கனவே, திருச்சியிலும் இதே போல அரசுப்பள்ளியில் முகாம் நடத்தப்பட்டதை மாணவர்களும், பெற்றோரும் கண்டித்த நிலையில், தனது அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற துஷ்பிரயோகங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்களிடம், "ஒருநாளில் பாடத்தை எடுக்கப்போவதில்லை. மாணவர்களுக்கு எந்த இடையூறும் இல்லை" என கூச்சமின்றி பதிலளித்துள்ளார் அமைச்சர் திரு. துரைமுருகன்.
உங்களின் சுய விளம்பரத்திற்காக முகாம்களை நடத்தவேண்டும் என்றால் உங்கள் கட்சி அலுவலகங்களில் நடத்தலாமே அமைச்சரே. மீண்டும் மீண்டும் அரசுப்பள்ளிகளில் கைவைப்பது என்ன மாதிரியான மனநிலை?
ஏற்கெனவே திருபுவனத்தில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்ததை அனைவரும் அறிவார்கள். இதுதான் நீங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் லட்சணம். இப்படியிருக்க, ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்து கெடுக்கிறீர்கள்? மாணவர்களின் கல்வியை தடுத்து அரசுப்பள்ளிகளில் முகாம் நடத்துவதை திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசுத் துறை சேவைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த முகாம் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை https://cmhelpline.tnega.org/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதியில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.
மகளிர் உரிமைத் தொகை, குடிநீர் இணைப்பு, பிறப்பு இறப்பு சான்றிதழ், வருமானம், இருப்பிடச் சான்றிதழ், வீட்டு மனை பட்டா, மின் கட்டண பெயர் மாற்றம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்களை பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த முகாமில் அளிக்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications