ரொம்ப ஜாம் ஆகுதே.. “தேர்தல் பத்திர நிதி அதிகம் பெற்றது தமிழ் மாநில காங்கிரஸ்”: கன்பியூஸ் ஆன அண்ணாமலை
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் 93% வருமானம் வந்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தேர்தல் பத்திர நிதி திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, "தேர்தல் பத்திரம் திட்டத்தின் மூலம் பாஜகவுக்கு வரக்கூடிய பணம் 52 சதவீதம் தான். திமுகவுக்கு 91 சதவீதம் வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 62 சதவீதம் வருகிறது.

தமிழ் மாநில காங்கிரஸுக்கு: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93 சதவீதம் வருகிறது. பாஜகவுக்கு நிதியாக வந்துள்ள 48 சதவீத தொகை தேர்தல் பத்திரம் இல்லாமல் வந்துள்ளது. இந்தியாவில் பாஜக மீது மக்கள் மதிப்பும் மரியாதையும் வைத்து, இந்தக் கட்சிக்கு 10 ரூபாய் கொடுத்தால், அவர்கள் சரியாக பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் கொடுத்துள்ளனர்.
பாஜகவுக்கு எந்த லாஸும் இல்லை: பாஜக இந்தியா முழுவதும் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கக்கூடிய திமுகவுக்கு ரூ.600 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வந்துள்ளது. பாஜகவுக்கு ஒரு மாநிலத்துக்கு சராசரியாக ரூ.212 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நிதி வந்துள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால் பாஜகவுக்கு எந்த இழப்பும் இல்லை.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் 5,500 பேருக்கும் காசோலையில் நிதி வழங்கினோம். இதுபோல் செய்ததாக திமுகவோ, வேறு ஏதாவது முன்னணி கட்சிகளோ, இல்லை தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு கட்சி சொல்ல முடியுமா? எனவே, எங்களைப் பொறுத்தவரை இந்த தீர்ப்பால் இழப்பு ஒன்றும் இல்லை” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
கன்பியூஸ் ஆன அண்ணாமலை: அண்ணாமலை பேசும்போது, தேர்தல் பத்திர நிதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 93 சதவீதம் பெற்றிருப்பதாக கூறினார் அண்ணாமலை. அவர் செல்போனில் பார்த்து கூறிய புள்ளி விவர பட்டியலில் TMC என்று இருந்ததை தமிழ் மாநில காங்கிரஸ் என புரிந்துகொண்டு பேசினார் அண்ணாமலை. திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு பதிலாக தமிழ் மாநில காங்கிரஸ் என அண்ணாமலை கூறியது சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், பாஜக - அதிமுக கூட்டணி அமைந்து, அதில் தங்கள் கட்சியும் இணைய வேண்டும் என விரும்பி வருகிறார். வரும் லோக்சபா தேர்தலுக்கு அவர் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது கட்சி தேர்தல் பத்திரம் மூலம் அதிக நிதி வாங்கியுள்ளதாக அண்ணாமலை கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ரொம்ப ரோல் ஆகுதே: அண்மையில், தமிழக சட்டசபையில் ஆளுநர் ரவி, திமுக அரசு தயாரித்த ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்த விவகாரம் பற்றி பேசும்போது, சபாநாயகர் எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக ஆளுநர் எனப் பேசி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலானது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பத்திர நிதி - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள தேர்தல் பத்திரங்களில், வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு, தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து திர்ப்பளித்தது.
தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அரசியல் கட்சிகளுக்கு பெரிய நிறுவனங்கள் நிதி உதவி அளித்து விட்டு, அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு இருப்பதாகவும், தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் பத்திர திட்டம், அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்றும் அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

இதுவரை பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகள் பெறப்பட்ட நிதி விவரங்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும். எஸ்பிஐ பகிர்ந்து கொள்ளும் தகவல்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வரும் மார்ச் 13ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து வெளியிட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டுள்ளது.
அதன்படி, தேர்தல் பத்திரம் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பாஜக ரூ.6,566 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி ரூ.1,123 கோடியும், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் ரூ.1,092 கோடி ரூபாயும் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடையாக பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications