“ஜோக் ஆஃப் தி இயர்” இதுதான்.. ஸ்டாலினின் அந்த பேச்சை விமர்சித்த அண்ணாமலை!
சென்னை: மதுவிலக்கு திருத்த சட்டம் கொண்டு வருவேன் என முதல்வர் ஸ்டாலின் கூறி இருப்பது இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 70ஐ நெருங்கியுள்ளது. கள்ளச்சாராயம் அருந்தி உடல்நிலை பாதிக்கப்பட்ட சுமார் 60 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே கள்ளச்சாராய மரண விவகாரம் தொடர்பாக அதிமுக அமளியில் ஈடுபட்டது. பாஜக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கள்ளச்சாராய பலி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளச் சாராய குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்குவதற்கான சட்ட திருத்தம் சட்டப்பேரவையில் இன்று அறிமுகப்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச்சட்ட முன்வடிவை வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் இன்று அறிமுகம் செய்தார். இந்நிலையில், மதுவிலக்கு சட்டத்தில் திருத்த மசோதா கொண்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியது குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "கடந்த 2023 ஆம் ஆண்டு, 23 பேர் பலியாகக் காரணமாக இருந்த கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த ஆண்டு, கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான பின்பும், மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியைப் பதவி நீக்கம் செய்யவில்லை. திமுக மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நெருக்கமான, போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாஃபர் சாதிக்குக்கு, திமுகவில் உயர் பதவி கொடுத்து, ரூ.2,000 கோடி சம்பாதிக்கும் வரை வேடிக்கை பார்த்தீர்கள்.
இத்தனையும் செய்து விட்டு, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937ல், தண்டனைகள் கடுமையாக இல்லை என்று திருத்த மசோதா கொண்டு வருகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது, இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications