Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துரைமுருகன் இப்படி கோட்டை விட்டுட்டாரே.. திமுகவே கேம் ஆடுதோ! அண்ணாமலையின் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொங்கு பகுதியில் திமுக ஐந்து அணைகள் கட்டியதாக தான் தெரிவித்த கருத்தை, அமைச்சர் துரைமுருகன் சரியாக கவனிக்காமல் அறிக்கை வெளியிட்டு உள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரும், நீண்ட நெடிய அரசியல் அனுபவம் மிக்கவருமான, திமுக பொதுச்செயலாளர், அண்ணன் அமைச்சர் திரு துரைமுருகன் அவர்கள், இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

Annamalai has said that Minister Durai Murugan statement is error

திமுகவினர், திமுக தலைவர் பேரனுக்கு போஸ்டர் ஒட்டுதல் முதற்கொண்டு, சாதாரண பொதுமக்கள், கடைகள் நடத்துபவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துதல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட எவ்வளவு பெரிய சமூக விரோதச் செயல்கள் செய்தாலும், அவர்கள் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற அறிக்கையே, வழக்கமாக அவர் பெயரில் வெளிவரும்.

அதிலிருந்து ஒரு நல்ல மாற்றமாக, எதிர்க்கட்சியாக இருந்தும், என் மீது கொண்டுள்ள அன்பினாலும், நான் தவறான தகவல்களைத் தெரிவித்து விடக்கூடாதே என்ற அக்கறையினாலும் அண்ணன் திரு துரைமுருகன் அவர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

நேற்றைய தினம், என் மண் என் மக்கள் நடைபயணத்தின்போது, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில், கொங்கு பகுதியில் உள்ள 24 அணைகளில், திமுக வெறும் ஐந்து அணைகளையே கட்டியுள்ளது என்று பேசியிருந்தேன். அண்ணன் திரு. துரைமுருகன் அவர்கள், திமுக நாற்பதுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டியிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். கொங்கு பகுதியில் ஐந்து அணைகள் என்று நான் குறிப்பிட்டுக் கூறியதை அவர் கவனிக்க மறந்துவிட்டார்.

புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து விளையாடும் அண்ணன் திரு துரைமுருகன் அவர்கள், அவசர கதியில், இந்த சிறிய தகவலைச் சரிவர கவனிக்காமல் கோட்டை விட்டுவிட்டாரே என்பது வருத்தத்தைத் தருகிறது. மேலும் திமுக கட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ள அணைகளில் பல, அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை என்று தமிழக அரசு இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவற்றையும் திமுகவினர் திருத்த மறந்து விட்டார்கள் என்பது, அண்ணன் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களை வேண்டுமென்றே முன்நிறுத்தி பின் நின்று விளையாடுகிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் விவசாயத்தை பாதுகாக்க 12 அணைகளை கட்டினார். ஆனால், ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் திராவிட முன்னேற்றக் கழகம் 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது என்று ஒரு தவறான குற்றச்சாட்டை அண்ணாமலை அவர்கள் திமுக மீது சுமத்தி இருக்கிறார். நித்தம் நித்தம் உண்மைக்கு மாறான செய்திகளை பேசி வம்பில் மாட்டிக் கொள்வதை நண்பர் அண்ணாமலை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்று தான் இந்த தவறான குற்றச்சாட்டு.

பெருந்தலைவர் காமராஜர், கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை போன்ற அணைகளை கட்டினார் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால், கழக ஆட்சியில் 5 அணைகளை மட்டுமே கட்டினார்கள் என்று அண்ணாமலை அவர்கள் சொல்வது ஜமக்காலத்தில் வடிகட்டிய பொய். நம்பியாறு அணை, பொய்கையாறு அணை, கொடுமுடியாறு அணை, கடனா அணை, இராமநதி அணை, பாலாறு பொருந்தலாறு அணை,

மருதாநதி அணை, பரப்பலாறு அணை, வடக்கு பச்சையாறு அணை , பிளவுக்கல் அணை, மோர்தானா அணை, அடவிநயினார் அணை, ராஜாதோப்பு அணை, ஆண்டியப்பனூர் ஓடை அணை, சாஸ்தா கோயில் அணை, குப்பநத்தம் அணை, இருக்கன்குடி அணை, செண்பகத்தோப்பு அணை, நங்காஞ்சியார் அணை, நல்லதங்காள் ஓடை அணை, மிருகண்டாநதி அணை, வரதாமநதி அணை, வரட்டாறு வள்ளிமதுரை அணை என 40 க்கும் மேற்பட்ட அணைகளை கட்டியது கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சி குற்றம் குறைகளை சொல்வது தவறில்லை. அவ்வாறு சொல்வதற்கு முன், சொல்கிற குற்றச்சாட்டு உண்மையா என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். என்னுடைய நீண்டகால அனுபவத்தில் நண்பர் அண்ணாமலைக்கு நான் சொல்கிற ஒரு யோசனையாகும். இல்லாவிட்டால், அவர் கூறும் குற்றச்சாட்டு யாவும் புஸ்வானமாகிவிடும். இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+