தமிழக பாஜகவில் 10 முதல் 15 முதல்வர் கேண்டிடேட்ஸ்! ஓபனாக பேசிய அண்ணாமலை!
சென்னை: தமிழக பாஜகவில் 10 முதல் 15 பேர் முதலமைச்சர் நாற்காலிக்கு பொருத்தமானவர்கள் இருப்பதாகவும் தனக்கு முதல்வர் கனவெல்லாம் கிடையாது எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தனது வேலையெல்லாம் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க வேண்டும், கட்சியில் நிறைய தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே தவிர வேறு அல்ல எனக் கூறியுள்ளார். துக்ளக் விழாவில் அண்ணாமலை பற்றி ரஜினிகாந்த் சொன்ன ரகசியத்தை ஆடிட்டர் குருமூர்த்தி உடைத்து பேசிய நிலையில், அது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

பதவி ஆசையில் இருப்பவர்கள் பாஜகவை பார்த்து குற்றஞ்சாட்ட எந்த தகுதியும் இல்லாதவர்கள் என்றும் பாஜகவில் யாருக்கும் பதவி ஆசை கிடையாது எனவும் கூறிய அண்ணாமலை, தங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் கொள்கைக்காவும், மாற்றத்துக்காகவும் தான் இருக்கிறார்களே தவிர வேறு எதற்காகவும் இல்லை எனத் தெரிவித்தார்.
தமிழக பாஜகவை பொறுத்தவரை தன்னைக்காட்டிலும் முதலமைச்சர் நாற்காலிக்கு 10 முதல் 15 பேர் பொருத்தமானவர்கள் இருக்கிறார்கள் என்று கூறிய அண்ணாமலை, திமுகவில் ''இவரை தவிர வேறு யாராவது ஒருவரை முதலமைச்சர் நாற்காலிக்கு பொருத்தமானவர் எனச் சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்'' என எதிர்கேள்வியும் எழுப்பினார். பாஜகவில் தாம் சிங்கிள் லீடர் கிடையாது என்றும் தன்னைப் போலவே பல தலைவர்கள் இருப்பதாகவும் கூறினார்.
மற்ற அரசியல் கட்சிகளுக்கும், பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் பாஜகவில் மட்டும் தான் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள் என்றும் மற்றக் கட்சிகளில் எல்லாம் ஒருவரை மட்டும் உட்கார வைத்துவிட்டு மற்றவர்கள் எல்லாம் அவரை சுற்றிச் சுற்றி வருகிறார்கள் என்றும் ஆனால் பாஜகவில் அப்படியில்லை எனவும் தெரிவித்துள்ளார். கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.












Click it and Unblock the Notifications