அமித் ஷா வருகைக்கு முன்னே குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. 1 மணி நேரம் நடந்த ஆலோசனை!
சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார் அண்ணாமலை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை குருமூர்த்தியை சந்திக்க உள்ள நிலையில், அவருடன் அண்ணாமலை 1 மணி நேரம் சந்தித்துப் பேசி உள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவாரா? என்பது தமிழக அரசியல் களத்தில் விவாதமாகி உள்ள நிலையில் அண்ணாமலை திடீரென குருமூர்த்தியை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தாண்டு பிறந்தது முதலே தமிழக அரசியல் பரபரப்பாக காணப்பட்டது. இந்த பரபரப்பான சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். இன்று இரவு 10.20 மணிக்கு சென்னைக்கு தனி விமானம் மூலமாக வருகிறார் அமித்ஷா. இரவு சென்னை வரும் அமித்ஷா கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். சென்னையில் முக்கிய பாஜக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுகிறார்.
அமித்ஷா நாளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்வது பற்றிப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னரே விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனையும் நாளை நடைபெற உள்ளது. தமிழக பாஜகவின் புதிய தலைவர் ரேஸில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியில் உள்ள நிலையில் புதிய தலைவர் யார்? என்று அமித்ஷா முன்னிலையில் முடிவு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முக்கிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமித்ஷா நாளை மாலை ஆடிட்டர் குருமூர்த்தியைச் சந்தித்து பேச உள்ளார். மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரைச் சந்திக்க உள்ளார். அங்கு தமிழக தமிழக அரசியல், பாஜக நிலவரம், கூட்டணி விவகாரம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்பின்போது அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய பாஜக பிரமுகர்களும் பங்கேற்கின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையை முடித்த பிறகு அமித் ஷா சென்னையில் இருந்து மீண்டும் விமானம் மூலமாக டெல்லி திரும்புகிறார்.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார் அண்ணாமலை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை குருமூர்த்தியை சந்திக்க உள்ள நிலையில், அவருடன் அண்ணாமலை சுமார் 1 மணி நேரம் சந்தித்துப் பேசி உள்ளார்.
முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வர உள்ளதை குறித்த கேள்விக்கு, "அமித்ஷா நிகழ்ச்சி குறித்து அதிகாரப்பூர்வமாக நாளை தெரிவிக்கிறோம். மாநில நிர்வாகிகளை சந்திப்பது மட்டுமே தான் நிகழ்ச்சி. பாஜக தலைவர் மாற்றத்திற்கும், அவரது வருகைக்கும் சம்பந்தம் இல்லை, அமித்ஷா வருகைக்கும், பாஜக தலைவர் நிகழ்விற்கும் தொடர்பு இல்லை" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications