அண்ணாமலைக்கு பாஜகவில் தேசிய பதவி.. மேலிடம் கையில் லிஸ்ட்.. என்ன பொறுப்பு தெரியுமா?
சென்னை: தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த ஆண்டு மாற்றப்பட்டார். இதையடுத்து அண்ணாமலைக்கு பாஜகவில் எந்த பதவியும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அண்ணாமலைக்கு பாஜகவில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை. கடந்த ஆண்டு அண்ணாமலைக்கு பதில் நயினார் நாகேந்திரன் பாஜகவின் தமிழக தலைவராக நியமனம் செய்யப்பட்டார். தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி அமைவதற்காக பாஜக மேலிடம் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது.

அதிமுகவை, அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அவர் தலைவராக செயல்பட்டால் அது கூட்டணிக்குள் பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்று நினைத்து அண்ணாமலைக்கு பதில் நயினார் நாகேந்திரன் பாஜகவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.
மேலிட சப்போர்ட்
இருப்பினும் அண்ணாமலைக்கு பாஜக மேலிட தலைவர்களின் சப்போர்ட் உள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் அண்ணாமலையின் உழைப்பை பாராட்டி உள்ளதாகவும், அவரை பாஜக தேசிய அளவில் பயன்படுத்தலாம். இதனால் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது வரை அவருக்கு எந்த முக்கிய பதவியும் வழங்கப்படவில்லை.
புதிய தகவல்
இதற்கிடையே தான் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அண்ணாமலைக்கு 6 தொகுதிகளின் பொறுப்பாளர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் அதையும் அண்ணாமலை உதறிவிட்டார். தனது தந்தையின் உடல்நலத்தை காரணம் காட்டி 6 சட்டசபை தொகுதிகளின் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய நிர்வாக அமைப்பில்..
அதாவது அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பதவி வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். இதுதொடர்பாக ‛டைம்ஸ்நவ்' ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், ‛‛சமீபத்தில் பாஜகவின் புதிய தலைவராக நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பாஜகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேசிய அளவில் தனக்கு ஏற்ப நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளாராம்.
அண்ணாமலைக்கு பதவி
அதன்படி தேசிய பொதுச்செயலாளர் பதவிக்கு ராம் மகாதேவ், அரவிந்த் மேனன், அண்ணாமலை, சாம்பிட் பாத்ரா, ரவீந்திர ரெய்னா ஆகியோரின் பெயர்கள் லிஸ்ட்டில் உள்ளது. அதேபோல் பாஜகவின் மகளிர் அணியின் தலைவர் பதவிக்கு வானதி சீனிவாசன் தொடர வாய்ப்புள்ளது. அதேவேளையில் பாஜகவின் தேசிய செயலாளர் பதவிக்கு ராஜீவ் பிஸ்லாவின் பெயர்கள் உள்ளது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவை எடுத்து கொண்டால் தேசிய பொது செயலாளர்களாக மொத்தம் 6 பேர் பதவி வகித்த வருகின்றனர். தற்போது தேசிய பொதுச்செயலாளர்களாக அருண் சிங், துஷ்யந்த் குமார் கவுதம், தருண் சுக், வினோத் தாவ்டே, சுனில் பன்சால், ராதா மோகன் தாஸ் அகர்வால் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இதில் வினோத் தாவ்டே, சுனில் பன்சால், தருண் சுக் ஆகியோர் அந்த பதவியில் தொடர்வார்கள் என்றும், மற்ற 3 பேருக்கு பதிலாக ராம் மகாதேவ், அரவிந்த் மேனன், அண்ணாமலை, சாம்பிட் பாத்ரா, ரவீந்திர ரெய்னா ஆகியோரில் 3 பேர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications