பாஜகவில் செயல்படாத நிர்வாகிகளுக்கு ஓய்வு... கட்சி அமைப்புகளில் மாற்றத்திற்கு தயாராகும் அண்ணாமலை..!
சென்னை: தமிழக பாஜகவில் செயல்படாத நிர்வாகிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு துடிப்புமிக்க புது முகங்களுக்கு கட்சிப்பதவி கொடுக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் முதற்கட்டமாக அவர் ஒரு பட்டியல் தயார் செய்து வைத்திருப்பதாகவும் விரைவில் தமிழக பாஜகவில் மாற்றங்கள் நிகழலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவுரவமான வெற்றியை பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டு அண்ணாமலை இப்போது தமிழகம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜக
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது முதல் தொடர் சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டு வருகிறார். அவ்வாறு அவர் சுற்றுப்பயணம் செல்கிற போது, மாவட்ட வாரியாக நிர்வாகிகளின் செயல்பாடுகள் கட்சிப்பணிகள் குறித்தெல்லாம் நேரடியாக அறியும் வாய்ப்பை பெறுகிறார் இவர். அதில் சில நிர்வாகிகளின் செயல்பாடுகளும் மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள கட்சி வளர்ச்சிப் பணிகளும் அவருக்கு அதிருப்தியை கொடுத்ததாக தெரிகிறது.

அடுத்தடுத்து தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்கள் வரவுள்ள நிலையில் செயல்படாத நிர்வாகிகளை பதவியில் வைத்துக்கொண்டு தேர்தலை எதிர்கொண்டால் அது சரியாக இருக்காது எனக் கருதும் அவர், துடிப்புமிக்க புது முகங்களுக்கு கட்சிப் பதவிகளை கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 20 மாவட்டங்கள் வரை கட்சி அமைப்புகளில் மாற்றங்கள் நிகழக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சி
அதிமுக உட்கட்சி பிரச்சனையை சமாளிக்கவே ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.க்கு நேரம் போதவில்லை என்பதால் பாஜகவை தமிழகத்தில் எதிர்க்கட்சி போல் ஆக்டிவாக வைக்க முயற்சி செய்கிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதுவரை அமைச்சர்கள் கீதாஜீவன், கயல்விழி செல்வராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி, பழனிவேல் தியாகராஜன் என பலருக்கு எதிராகவும் கேள்விக்கணைகளை வீசியிருக்கிறார்.

போராட்டங்கள்
திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் திட்டத்தில் உள்ள அண்ணாமலை, அந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தி முடிக்க கூடிய ஆற்றல் உள்ள நபர்களை அடையாளம் கண்டு வருகிறார். மொத்தத்தில் விரைவில் தமிழக பாஜகவில் புது முகங்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications