கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி
சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக அண்ணாமலை எடுத்துள்ள முடிவுக்கு பின், கொங்கு மண்டல கணக்கு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இது அதிமுகவுக்கு மீண்டும் பின்னடைவை உருவாக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜகவிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சி அல்லது மக்கள் இயக்கம் தொடங்கப்போவதாகத் தமிழக அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு நடுவே, அண்ணாமலை திடீரென டெல்லிக்கு அவசரப் பயணம் மேற்கொண்டுள்ளது அரசியல் அரங்கில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு அவர் வந்த காரில் 'பாஜக கொடி' அகற்றப்பட்டிருந்தது, இந்த சந்தேகங்களை மேலும் வலுவாக்கியுள்ளது. கோயம்புத்தூரில் அவரது ஆதரவாளர்கள், "தமிழகத்தை வழிநடத்த வாருங்கள் தலைவரே" என அவரது பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர்களை ஒட்டி பரபரப்பைக் கூட்டியுள்ளனர்.
டெல்லி புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அண்ணாமலையிடம், "நீங்கள் புதிய கட்சி தொடங்கப் போகிறீர்களா?" என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்கு அண்ணாமலை 'இல்லை' என்று மறுப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, "தயவுசெய்து காத்திருங்கள். இன்னும் இரண்டு நாட்களில் நாம் விரிவாக உட்கார்ந்து பேசுவோம்" என்று பதிலளித்துள்ளார்.
அண்ணாமலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த சொகுசு காரில் பாஜகவின் அதிகாரப்பூர்வ கொடி கட்டப்படவில்லை. அவர் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே மாற்றப்பட்டிருந்தாலும், வழக்கமாகப் பயன்படுத்தும் கட்சி அடையாளத்தை முற்றிலும் தவிர்த்துள்ளது அவர் புதிய பாதைக்குத் தயாராகிவிட்டார் என்பதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அண்ணாமலை டெல்லி சென்று பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்து, கட்சியில் இருந்து விலகும் தனது முடிவை அல்லது தனது அடுத்தகட்ட மக்கள் இயக்கத் திட்டத்தை முறைப்படி அறிவிக்கவே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலையின் இந்த புதிய திட்டத்திற்கு பின் கொங்கு மண்டல கணக்கு ஒன்று இருப்பதாக சொல்லப்படுகிறது.
கொங்கு மண்டலத்தில் அதிமுக வலிமையாக காணப்பட்டாலும், தற்போது தவெகவின் எழுச்சி அதிமுகவுக்கு பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. இன்னொரு பக்கம் கொங்கு மண்டலத்தில் அதிமுக வலிமையாக இருக்க பாமகவும் ஒரு முக்கிய காரணம். சேலம், தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றிக்கு பாமக மிக முக்கிய பங்காற்றியுள்ளது.
அதேபோல் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக மக்களிடையே எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை குறைந்து வருவதாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். இதனை அறுவடை செய்ய அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அண்ணாமலைக்கு கொங்கு பகுதிகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனை லோக்சபா தேர்தலின் போதே காட்டி இருந்தார்.
அவர் பாமக மற்றும் டிடிவி தினகரன் தரப்பை சேர்த்து கொண்டால், தமிழ்நாட்டில் முக்கிய சக்தியாக உருவாக முடியும். அதுமட்டுமல்லாமல் அதிமுகவில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகும் சூழலில், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் தனக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று அண்ணாமலை நம்புகிறார். இதன் காரணமாக புதிய ரூட்டில் பயணிக்க அண்ணாமலை விரும்புவதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications