தாமரையை கழட்டி வெச்சிட்டு அண்ணாமலை பின்னாடி போகும் ஃபேன்ஸ்.. 2 நாளில் திருப்பம்! பாஜக எதிர்பார்க்கல
சென்னை: ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் அண்ணாமலை என்ற தனி நபர் பக்கமே இப்போது திரும்பியிருக்கிறது. பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, நேற்று முன்தினம் "வீ தி லீடர்ஸ்" (We The Leaders) என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி, வரும் பொதுத்தேர்தலில் தங்களது இயக்கம் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வந்ததுமே அரசியல் வட்டாரத்தில் லேசான சலசலப்பு தான் ஏற்பட்டது. ஆனால், கடந்த 2 நாட்களாக வெளியாகி வரும் புள்ளிவிவரங்கள், தமிழக பாஜகவின் தலைமையை அப்படியே நிலைகுலைய செய்திருக்கிறதாம்.. என்ன நடந்தது?
அண்ணாமலை தனது புதிய இயக்கத்தில் பொதுமக்கள் இணைவதற்காக 'https://wetheleader.org/' என்ற வெப்சைட் அட்ரஸை வெளியிட்டிருந்தார். இந்த வெப்சைட் தொடங்கப்பட்ட நிமிடத்திலிருந்தே, உறுப்பினர்களின் சேர்க்கை ஜாக்கி சான் படம் போல ஜெட் வேகத்தில் எகிறத் தொடங்கியது.

அண்ணாமலை அசத்தல்
ஒவ்வொரு நிமிடத்திற்கும் சராசரியாக 200 முதல் 300 பேர் வரை ஆன்லைனில் தங்களை இணைத்து வருகின்றனர். நேற்று காலை 11 மணி அளவில் 15 லட்சத்தைத் தாண்டிய இந்த உறுப்பினர் சேர்க்கை, மாலை 6 மணி நிலவரப்படி 16 லட்சத்து 3 ஆயிரத்து 500 என்ற பிரம்மாண்ட எல்லையைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.
இந்த ஆன்லைன் அலை ஒருபுறமிருக்க, அடுத்தகட்டமாக மாநிலம் முழுவதும் "நேரடி உறுப்பினர் சேர்க்கையை" மிக பிரம்மாண்டமாகத் தொடங்க அண்ணாமலை டீம் படுவேகமாக ஸ்கெட்ச் போட்டு வருகிறது.
தமிழக பாஜகவுக்கு தலைவலி
இங்குதான் தமிழக பாஜகவிற்குப் பெரிய தலைவலியே ஆரம்பமாகியிருக்கிறது. இந்த புதிய இயக்கத்தில் இணைந்துள்ள 16 லட்சத்திற்கும் அதிகமானவர்களில், பெரும்பாலானவர்கள் தமிழக பாஜகவைச் சேர்ந்த தீவிர தொண்டர்களும், அடிமட்ட நிர்வாகிகளும் தான் என்ற கசப்பான உண்மை கமலாலயத்தை உலுக்கியெடுத்துள்ளது.
அண்ணாமலை தலைவராக இருந்தபோது அவரோடு தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள், இப்போது தாமரை சின்னத்தை அப்படியே கழட்டி வைத்துவிட்டு அண்ணாமலையின் பின்னால் படையெடுத்து வருகிறார்களாம்.. சாதாரண தொண்டர்கள் மட்டுமன்றி, பாஜகவின் பல்வேறு மாவட்ட, மாநில முக்கிய விஐபிகளும் கூட அண்ணாமலையுடன் கைகோர்க்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்கள்
பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து தான் மிக அதிகப்படியான தொண்டர்கள் அண்ணாமலை பக்கம் சாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை கமலாலயத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் அவசர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதோடு, தங்களது சொந்தக் கோட்டையிலேயே விழுந்துள்ள இந்த மிகப்பெரிய விரிசலை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் தவித்து வருகிறார்களாம்.
அண்ணாமலையின் இந்த அதிரடித் தொடக்கம், வரவிருக்கும் பொதுத்தேர்தலில் தமிழகத்தின் பாரம்பரிய கட்சிகளுக்கும், குறிப்பாக பாஜகவிற்கும் ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
மிகப்பெரிய வெற்றி
ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஒரு சில நாட்களிலேயே, எந்தவொரு பெரிய கட்டமைப்பும் இல்லாமல் 16 லட்சம் பேரை ஒரு இணையதளம் மூலம் திரட்டுவது என்பது அண்ணாமலையின் தனிப்பட்ட ஈர்ப்பு சக்திக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்க முடிகிறது.
தமிழகத்தில் பாஜகவை வளர்த்ததில் அண்ணாமலைக்கு இருந்த பங்கை டெல்லி மேலிடம் சாதாரணமாக நினைத்திருந்தால், இந்த தொண்டர்கள் விலகல் அவர்களுக்குக் கிடைத்த ஒரு பெரிய பாடமாகும். களத்தில் எவ்வளவுதான் கட்சிக் கொள்கைகள் பேசினாலும், அடிமட்டத் தொண்டர்கள் "தலைவன்" என்ற ஒற்றை முகத்தை நம்பித்தான் பின்னால் வருகிறார்கள் என்பதற்கு இந்த அதிரடி அரசியல் திருப்பமே மிகச்சிறந்த உதாரணம் போலும்... அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications