“FOODIE” அண்ணாமலை.. ரூ.1 அனுப்பி விளையாட்டு! கொங்கு அமைப்புகளுக்கு நிதி -வங்கி கணக்கில் ருசிகர தகவல்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்டி இருந்த ரபேல் வாட்ச் பில்லை கேட்டதற்கு தன்னுடைய வங்கி கணக்கு ஸ்டேட்மெண்டை வெளியிட்ட நிலையில், அதன் மூலம் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்து இருக்கின்றன.
தமிழ்நாடு பாஜக தலைவராக பதவியேற்றதில் இருந்து தினசரி செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி வரும் அண்ணாமலை எப்போதும் கையில் ஒரு வாட்ச் கட்டி இருப்பார். கடந்த டிசம்பர் மாதம் அந்த வாட்ச் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவுகளை வெளியிட தொடங்கினர். இந்த நிலையில் அப்போது செய்தியாளர் ஒருவர் அண்ணாமலையிடம் அவர் அணிந்து இருக்கும் வாட்ச் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை, இந்திய பாதுகாப்புத் துறை உள்ள ரஃபேல் விமான பாகங்களைக் கொண்டு 500 வாட்சுகள் தயாரிக்கப்பட்ட நிலையில் அதில் 149-வது கடிகாரத்தை தான் அணிந்து இருப்பதாகவும் தெரிவித்தார். தான் ஒரு தேசியவாதி என்பதால் அந்த வாட்ச்சை வாங்கி கட்டி இருப்பதாக கூறிய அண்ணாமலை, உயிர் இருக்கும் வரை இந்த கடிகாரம் தனது உடலில் இருக்கும் என்றார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, "பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கிய ரசீதை வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்.
வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசிய வியாதி, மன்னிக்க.. தேசியவாதி, ஆடு வளர்த்துச் சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாகத் தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை வெளியிட முடியுமா?" என்று வெளியிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, விரைவில் தன்னுடைய சம்பளக் கணக்கையும், வாட்ச் வாங்கிய பில்லையும் வெளியிடுவதாக கூறினார். 4 மாதங்களாக அதை அவர் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியன்று வாட்ச் பில்லையும், தன்னுடைய 90 பக்க வங்கி கணக்கு ஸ்டேட்மெண்டையும் வெளியிட்டார். அந்த ரசீது எண் தவறாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
இதற்கிடையே அண்ணாமலை வெளியிட்ட 90 பக்க வங்கி ஸ்டேட்மெண்டில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்து உள்ளன. அதன்படி பார்த்தால் அண்ணாமலை உணவு விரும்பியாக இருந்திருப்பார் என்று தெரிகிறது. சென்னையில் உள்ள உணவகங்களில் அதிகம் சாப்பிட்டு பில் செலுத்தி இருக்கிறார். அதேபோல் பெங்களூருவில் பல முறை ஸ்விக்கியில் ஆர்டர் செய்து உணவு சாப்பிட்டு உள்ளார்.
இன்னும் ஒரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் நண்பர்கள் பலருக்கு இவர் ரூபாயை அனுப்பி உள்ளார். கூகுள் பே செயலியில் வரும் ஸ்கிராட்ச் கார்டுகளை சுரண்டி ரூ.2 முதல் ரூ.12 வரை வெற்றி பெற்று உள்ளார் அண்ணாமலை. சினிமா பிரியராகவும் அண்ணாமலை இருக்கிறார். மும்பை, டெல்லி செல்லும் சமயங்களில் தனியாக திரையரங்கம் சென்று படம் பார்த்து உள்ளார். அதேபோல் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்கு சந்தா செலுத்தி வந்து உள்ளார்.
ரூ.10 ஆயிரத்துக்கு புத்தகங்களை அண்ணாமலை வாங்கி உள்ளார். அதேபோல் கர்நாடகா கோல்ஃப் அசோசியேசனுக்கு ரூ.1,18,000 சந்தா செலுத்தி உள்ளார். அதேபோல் கொங்கு குடும்பம் மற்றும் கோவை கொங்கு நண்பர்கள் போன்றவற்றுக்கு அண்ணாமலை சந்தா செலுத்தி இருப்பது அவரது வங்கி கணக்கு விபரத்தில் இருந்து தெரியவந்து உள்ளது.












Click it and Unblock the Notifications