அதிமுக vs பாஜக.. தெர்மாகோல் ஆராய்ச்சியில் இருந்தவரே.. செல்லூர் ராஜூ மீது பாய்ந்த அமர் பிரசாத் ரெட்டி!
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி விமர்சித்துள்ளார்.
சென்னை: இத்தனை நாட்கள் தெர்மாகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பாஜகவுக்கு ஆலோசனை சொல்லுவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர் அமர் பிரசாத் ரெட்டி பதிவிட்டுள்ளார். அதேபோல் வாய்க்கொழுப்பின்றி பேசுவதற்கு வகுப்பெடுக்க மதுரையில் விரைவில் செல்லூர் ராஜூ கல்லூரி தொடங்கப் போவதாக அமர் பிரசாத் ரெட்டி கிண்டல் செய்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக - அதிமுக இடையிலான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் தீவிரமாகி கொண்டே வருகிறது. பாஜகவின் முக்கிய நிர்வாகியான சிடி நிர்மல் குமார், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
இவரைத் தொடர்ந்து பாஜக ஐடி விங்கைச் சேர்ந்த பலரும் அக்கட்சியில் இருந்து விலகியதோடு, அதிமுகவிலும் இணைந்தனர். இதனை கண்டித்து பாஜகவினர் 4 பேர் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை எரிக்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

அதிமுகவினர் விமர்சனம்
அதுமட்டுமல்லாமல் அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவோடு ஒப்பிட்டதையும் அதிமுக முக்கிய தலைவர்கள் ரசிக்கவில்லை. இதனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி, அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் வரை கடுமையாக அண்ணாமலையை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

கொந்தளித்த செல்லூர் ராஜூ
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ கூறுகையில், பாஜகவிற்கு சகிப்புத்தன்மை இல்லை என்பது தெரிகிறது. அந்த கட்சி தமிழ்நாட்டில் ஏன் வளரவில்லை என்பதற்கு இதுதான் காரணம். திராவிட இயக்கங்கள் போல வளரணும் என்றால் அது முடியாது. அந்த இயக்கத்திற்கு அதற்கான தகுதியும் கிடையாது. அண்ணாமலை வாய்க் கொழுப்போடு பேசுவதாக தெரிகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் தான் காரணம். ஜெயலலிதா உடன் ஒப்பிட்டு பேசுவதற்கு தகுதியே கிடையாது.

அடக்கம் தேவை
அவரை போல் யாரும் பிறக்கவும் இல்லை. இனி பிறக்கவும் முடியாது. பாஜக மதிக்கக் கூடிய கட்சியாக இருந்தது. தற்போது அதில் சில விஷமத்தனமான கிருமிகள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோர் கண்டித்து தமிழக பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவில் இருந்து ஆட்களை இழுத்து வந்து அதிமுகவை வளர்க்கும் அளவிற்கு எங்கள் கட்சி மோசமாக செல்லவில்லை. அண்ணாமலைக்கு அடக்கம் தேவை என்று தெரிவித்தார்.

அமர் பிரசாத் ரெட்டி பதிவு
இதனை பாஜகவினர் ரசிக்கவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவின் முக்கிய நிர்வாகியும், அண்ணாமலை ஆதரவாளருமான அமர் பிரசாத் ரெட்டி, செல்லூர் ராஜூவை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், வாய்க்கொழுப்பின்றி பேசுவது; திமிரின்றி நடந்து கொள்வது என்பது குறித்தெல்லாம் வகுப்பெடுக்க மதுரையில் விரைவில் கல்லூரி துவங்கப் போறாராம் செல்லூர் ராஜு. நெருங்கிய நட்பில் இருக்கும் யாராவது அங்க ஒரு 'சீட்' வாங்கிக் கொடுங்கப்பா! என்று பதிவிட்டுள்ளார்.

திமிரில் பேசக் கூடாது
அதேபோல் மற்றொரு ட்விட்டர் பதிவில், இத்தனை நாட்கள் தெர்மாகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.,வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது என்று பதிவிட்டுள்ளார். இது அதிமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications