தமிழக பாஜகவிற்கு நீங்கள் தலைவரா? அண்ணாமலை தலைவரா? நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்
சென்னை: தமிழக பாஜகவிற்கு நீங்கள் தலைவரா அல்லது அண்ணாமலை தலைவரா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் இடையிலான சந்திப்பு நட்பு ரீதியிலானது என்று கூறிய நயினார் நாகேந்திரன், இந்த கேள்வி தங்கள் இருவருக்கும் மோதலை ஏற்படுத்த கேட்கப்பட்டது போல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழக பாஜகவில் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை இடையில் மோதல் வெடித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியதோடு, அதற்கு நயினார் நாகேந்திரனை நேரடியாகவும் குற்றம்சாட்டி இருந்தனர். இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று ஜேபி நட்டாவை சந்தித்து திரும்பினார்.

நயினார் நாகேந்திரன் டெல்லி சென்ற நேரத்தில் அண்ணாமலை நேரடியாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதுமட்டுமல்லாமல் விரைவில் ஓபிஎஸ்ஸை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் நயினார் நாகேந்திரனை ஓரம்கட்ட அண்ணாமலை முயற்சிப்பதாக சில விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எனக்கும் அண்ணாமலைக்கும் சண்டை மூட்டி விடுவதை போல் கேள்விகளை கேட்க வேண்டாம்.. டிடிவி தினகரன் மற்றும் அண்ணாமலை இடையிலான சந்திப்பு நட்பு ரீதியிலானது. எனக்கும் மற்ற கட்சிகளில் நட்பு இருக்கிறது. அது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் நயினார் நாகேந்திரனை மோசமான விமர்சித்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரையும் தமிழக பாஜகவில் உள்ள எந்த நிர்வாகிகளும் கண்டிக்கவில்லை. அதேபோல் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை செயல்பட்ட போது, தமிழிசை செளந்தரராஜனுடன் மோதல் ஏற்பட்ட போது, அமித்ஷா பொதுவெளியிலேயே தமிழிசையை கண்டித்தார்.
தற்போது நயினார் நாகேந்திரனை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவருடனும் அண்ணாமலை இணக்கம் காட்டுவதை பாஜக மேலிடம் வேடிக்கை பார்த்து வருவதாக பார்க்கப்படுகிறது. இதனால் அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் புதிய அறிவுறுத்தல்களை வழங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் டெல்லிக்கு சென்று ஜேபி நட்டா மற்றும் அமித்ஷா ஆகியோரை நயினார் நாகேந்திரன் சந்தித்த போதும், தமிழ்நாட்டில் கூட்டணியை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்திலேயே சென்று சந்தித்திருக்கிறார். அந்த சந்திப்பின் போது பாமக மற்றும் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு முயற்சிகள் எடுத்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications