அன்பில் மகேஷ் கைது.. ரூ. 1,000 கோடி நோபல் ஸ்டீல் முதலீடும் என்னாச்சுனு பாருங்க?.. அண்ணாமலை அதிரடி
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்ட புகாரில் பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அன்பில் மகேஷ் கைது நடவடிக்கைக்கு வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: பள்ளிக் கல்வித் துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

திமுக கோப்புகள்
கடந்த 2023 ஆம் ஆண்டு, நாங்கள் DMK Files வெளியிட்டபோது, தமிழ்நாட்டில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அன்றைய திமுக அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை. அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை, முறைகேடான முதலீடு என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கும் இன்றுவரை பதில் இல்லை.
தவெக அரசுக்கு கோரிக்கை
அன்பில் மகேஷ் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளை, நோபல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கும் இன்று வரை பதில் இல்லை. நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு?.
அந்த நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்?. இந்த விவகாரத்திலும் தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
