அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்.. 3 இலவச கேஸ் சிலிண்டர்களுக்கான பணம் எப்போது வரும்? யாருக்கெல்லாம் பலன்?
சென்னை: கேஸ் சிலிண்டர் வாங்கும்போது மொத்த தொகையையும் செலுத்த வேண்டியிருக்கிறது.. இந்த செலவை குறைக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம், வரும் 2027 பொங்கல் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில், முதல் கட்டமாக 3 சிலிண்டர்களுக்கான தொகை வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் பயன்பெற என்ன தகுதிகள் இருக்க வேண்டும், பணம் எப்படிக் கிடைக்கும் என்பதை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் எனத் தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதற்காக அறிவிக்கப்பட்ட அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் முதல் கட்டத்தில் ஆண்டுக்கு 3 சிலிண்டர்களுக்கான தொகை வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.4,000 கோடி ஒதுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு முன்னுரிமை?
இந்த திட்டத்தில் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், சிறு மற்றும் குறு விவசாயக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு வழங்கிய செல்லுபடியாகும் குடும்ப அட்டை வைத்திருப்பதும், குடும்பத் தலைவி அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் செயலில் உள்ள கேஸ் இணைப்பு இருப்பதும் அவசியம்.
இந்த திட்டத்துக்காகத் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் கேஸ் இணைப்பு தொடர்பான விவரங்கள் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்கள் ஆதாரை இணைக்கும் e-KYC நடைமுறையை முடித்திருக்க வேண்டியது அவசியம்.
கேஸ் சிலிண்டர் இணைப்புகள்
உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் வருவாய்த் துறையின் தரவுகள் மூலம் கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்கள் குறித்த விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டில் குடும்பத்தின் ஆண்டு வருமான விவரம் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், வருமானச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம்.
ஒரே ரேஷன் கார்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேஸ் இணைப்புகள் இருந்தாலும், முதன்மையான இணைப்புக்கு மட்டுமே ஆண்டுக்கு 3 சிலிண்டர்களுக்கான பலன் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு இணைப்புக்கும் தனித்தனியாக இந்தப் பலனைப் பெற முடியாது.
வங்கிக்கணக்கில் வரவு
இந்தத் திட்டத்தில் அரசு நேரடியாக சிலிண்டர்களை வீடுகளுக்கு வழங்காது... வழக்கம்போல கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்து, அதற்கான முழுத் தொகையையும் செலுத்தி வாங்கிக் கொள்ள வேண்டும். சிலிண்டர் விநியோகம் உறுதி செய்யப்பட்டதும், அதற்கான முழுத் தொகையும் பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 3 சிலிண்டர்களுக்கான தொகையை வழங்கும் இந்தத் திட்டம் 2027 பொங்கல் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தேவையா என்பதைப் பயனாளிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.
சூப்பர் சிக்ஸ் திட்டம் தொடர்பான முழுமையான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்ட பிறகுதான், யாருக்கெல்லாம் இந்தத் திட்டத்தில் பலன் கிடைக்கும், அதைப் பெற என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது தெளிவாக தெரியவரும்...!!


Click it and Unblock the Notifications
