திருவொற்றியூர் சம்பவம்.. இத்தனை நாளா எங்க போனீங்க? ஆறுதல் கூற சென்ற ஆதவ், ராஜ்மோகனை ஓடவிட்ட மக்கள்
சென்னை: திருவொற்றியூரில் மாணவர் தனுஷின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல சென்ற அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகனை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆறுதல் சொல்ல சென்ற அமைச்சர்களை 3 நாட்கள் வராமல் இன்று எதற்கு வந்தீர்கள்? என அப்பகுதி மக்கள் கேள்விகளால் துளைத்து எடுத்தனர். இதனால் காரில் ஏறி புறப்பட்ட போதும், அமைச்சர்களை விடாமல் பைக்கில் விரட்டி சென்று ஆதவ் அண்ணே பதில் சொல்லிட்டு போங்கண்ணேன் என கேள்விகளை எழுப்பினர்.
சென்னை திருவொற்றியூரில் சக மாணவர்களால் அடித்து கொல்லப்பட்ட மாணவர் தனுஷின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்வதற்காக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் சென்றனர். அப்போது அவர்களது உறவினர்கள் அமைச்சர்கள் இருவரையும் துரத்தி சென்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். இன்னும் எத்தனை குழந்தைகளுக்கு இப்படி ஆகும் என கேள்விகளை கேட்டு அமைச்சர்களை முற்றுகையிட்டு கேள்விகளை எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆறுதல் கூற வந்த அமைச்சர்கள்
சென்னை திருவொற்றியூர் வசந்தா நகர் பகுதியில் வசித்து வந்த பிளஸ் 2 மாணவர் தனுஷ்குமார் சக மாணவர்களால் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தனுஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கு அமைச்சர்கள் வருவதாக சொல்லப்பட்டதாகவும் ஆனால் யாரும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு மாணவரின் பெற்றோர் வெங்கடேஷ் மற்றும் லட்சுமிக்கு ஆறுதல் கூறுவதற்காக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் வருகை தந்தனர். அப்போது அமைச்சர்கள் வருகைக்கு முன்பாகவே போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டனர். அவரது வீட்டுக்குள் உறவினர்கள், அப்பகுதி மக்கள் என வேறு யாரும் செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து அமைச்சர்கள் இருவரும் தனுஷின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அமைச்சர்களை முற்றுகையிட்டனர்
இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்த மக்கள் அமைச்சர்கள் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும் அங்கு அதிகளவில் குவிந்தனர். பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசாருடம் அப்பகுதி மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இங்கு எதுவுமே சரியில்லை. எங்கு பாத்தாலும் கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது. சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும் என போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தனுஷின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வெளியே வந்த அமைச்சர்கள் இருவரும் மக்களிடம் எதுவும் பேசாமல் நடந்து சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அமைச்சர்களை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பினர். எங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும். எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இங்கு சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும். கஞ்சா, போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். ஆனால் அமைச்சர்கள் மக்களின் பேச்சுகளை கேட்காமல் வேகமாக நடந்து சென்றனர். இதனால் அமைச்சர்களை பின் தொடர்ந்து முற்றுகையிட்டனர்.
பதில் சொல்லிட்டு போங்க சார்..
எங்கு பாத்தாலும் கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது.. எங்க பிள்ளைகளுக்கு என்ன பாதுகாப்பு.. பதில் சொல்லிட்டு போங்க சார்.. 3 நாட்கள் வராமல் இன்று எதற்கு வந்தீர்கள்? என அப்பகுதி மக்கள் கேள்விகளால் துளைத்து எடுத்தனர். எதாவது சொல்லிட்டு போங்க சார்.. படிக்கிற பிள்ளைங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது சார்.. எங்கள் பிள்ளைங்களுக்கும் இப்படி நடக்காதுன்னு சொல்லுங்கண்ணே.. இதனால் காரில் ஏறி அவசரமாக புறப்பட்டனர். எனினும் அமைச்சர்களை விடாமல் பைக்கில் விரட்டி சென்று ஆதவ் அண்ணே பதில் சொல்லிட்டு போங்கண்ணேன் என கேள்விகளை எழுப்பினர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், "ஒரு இடத்திலேயேயும் சிசிடிவி கேமிரா கிடையாது. அரசு என்ன தான் செய்கிறது என்றே தெரியவில்லை. ஒன்னுமே புரியவில்லை.. ஒரு கல்லூரியில் பாதுகாப்புக்கு என ஒருத்தரும் கிடையாது. இங்கே கூட தெருவில் 8 மணிக்கு எல்லாம் கஞ்சா விற்பனை தான் நடக்கு. பிள்ளைங்களை பள்ளிக்கு அனுப்பவே பயமாக இருக்கு. வீட்டை விட்டு வெளியே கூட செல்ல முடியல.. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினர்.


Click it and Unblock the Notifications
