அதிமுக தலைமையகத்தில் சமூக விரோதி ஊடுருவல்.. யாரை சொல்கிறார் ஜெயக்குமார்? அந்த மேட்டரா இருக்குமோ?
சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக கூறி அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று மனு அளித்தார்.
சசிகலா சுற்றுப் பயணத்தின்போது தான் தான் அதிமுக பொதுச் செயலாளர் என்றும், விரைவில் தொண்டர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் செல்வேன் என்றும் கூறி வருகிறார்.
இந்நிலையில், சமூக விரோதிகள் அதிமுக தலைமையகத்தில் ஊடுருவ இருப்பதாகக் கூறி பாதுகாப்பு கேட்டு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான ஜெயக்குமார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா அறிவிப்பு
தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா, நான்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர். அடுத்தகட்டமாக அ.தி.மு.க தொண்டர்களை திரட்டி அ.தி.மு.க தலைமை கழகத்துக்கு செல்வேன் எனப் பேசி வருகிறார். ராயப்பேட்டை பகுதியில், சசிகலாவை வரவேற்று அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களையும் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக தலைமையத்தில் சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாகக் கூறி பாதுகாப்பு கேட்டு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான ஜெயக்குமார் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக தலைமை நிலையம்
வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் மனு அளித்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக தலைமைக் கழகத்துக்கு பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரகத்தில் மனு அளிக்கப்பட்டது. சமூக விரோதிகள் தலைமை கழகத்திலே அத்துமீறி நுழைய இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் அந்த மனுவைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் மாளிகையில் சமூக விரோதிகள் நுழைய இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில்தான் இந்த மனுவை அளித்துள்ளோம். எம்.ஜி.ஆர் மாளிகையில் எந்தவிதமான சமூக விரோத ஊடுவல் இருக்கக்கூடாது. அந்த வகையில் எங்களுடைய கடமையை நாங்கள் செய்தோம்.

நியாயமான தீர்ப்பு வரும்
நீதிமன்றத்தில் நியாயமான தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். நீதிமன்றத்தில் சரியான திசையில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. நல்ல தீர்ப்பு எங்களுக்கு கிடைக்கும். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் முதல்வரை சந்தித்து கடிதம் அளித்தது, அதன்பிறகு பேட்டி அளித்தது இவை அனைத்தும் பட்டவர்த்தனமாகத் தெரிந்த விஷயம். திமுக அரசிலிருந்து அவர் அளித்த கடிதத்தை வெளியிட்டிருந்தனர். அதில் என்ன எழுதியிருந்தது. அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகின்ற முதலமைச்சர் என்று முதல்வர் ஸ்டாலினை பாராட்டியுள்ளார் ஓ.பி.ரவீந்திரநாத்.

திமுகவோடு ரகசிய உறவு
கிளை கழகத்திலிருந்து திமுகவினர் அடாவடி, அட்டூழியம், செய்துவரும் நிலையில் அதிமுக கட்சியினர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எவ்வளவு வழக்குகள் அதிமுகவினர் போடப்பட்டு வருகிறது. என் மீது எத்தனை வழக்கு? வேலூர் மாவட்ட கழக செயலாளர் மீது வழக்கு. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் திமுகவைத் தீயசக்தி என்று காட்டிய வழியில் கட்சியினரின் குரல் ஒலித்துக்கொண்டிருக்கும்போது இப்படி செய்தால் எப்படி? ஓ.பன்னீர்செல்வம் கருணாநிதியின் ரசிகர். ஓபிஎஸ்திமுகவுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறார் என்று சசிகலாவே சொன்னார்.

தீய சக்தி
ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கை சரியில்லை. திமுகவோடு நல்ல உறவை வைத்துக்கொண்டு திமுக வாழ்க என்றால் எந்த கழக தொண்டன் இதனை ஏற்றுக்கொள்வான். எம்.ஜி.ஆர் ஊட்டியது திமுக தீய சக்தி என்ற ரத்தம்- வாழ்நாளில் ஜெயலலிதா எங்களுக்கு ஊட்டியது திமுக என்ற தீய சக்தி என்ற ரத்தம். இதுதான் வாழ்நாள் முழுக்க எங்களுக்குள் ஓடுகிறது. எந்த நிலையிலும் இந்த நிலையிலிருந்தும் மாற மாட்டோம். அனைத்தையும் கழக தொண்டன் பார்த்துவருகிறான். யாரையும் இன்றைக்கு ஏமாற்ற முடியாது.

ஐஸ் வைக்கிறார்
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் அவரைச் சந்தித்தார். ஆனால் அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் சென்றார். ஜெயலலிதா பல சாதனை திட்டங்களை செய்திருந்தபோதிலும் அவர் எதுவும் குறிப்பிடாமல் சென்றார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஏன் முதல்வருக்கு ஐஸ் வைக்கவேண்டும். அவரை பாராட்டும் அவசியம் என்ன வந்தது? அவர் திமுகவை நோக்கி போகும் நிலையைத்தான் இது காட்டுகிறது.

திமுகவை நோக்கி
எம்.ஜி.ஆர் எந்த நோக்கத்திற்காகக் கட்சியை தொடங்கினார். திமுகவில் கணக்கு கேட்டு தனிக் கட்சியை ஆரம்பித்தார். கருணாநிதியின் குடும்ப அரசியிலிருந்து தமிழகம் விடுபடவேண்டும் என்று தொண்டர்களிடம் எம்.ஜி.ஆர் தெரிவித்தார். அண்ணாவிற்கு பிறகு திமுக என்பது ஒரு தீய சக்தி என்று சொன்னார். அப்படிப்பட்ட உணர்வை உடலில் ஏற்றிக்கொண்டு அதற்கு மாறாகச் செயல்பட்டால் அது திமுகவுக்கு ஆதரவுதானே" எனத் தெரிவித்துள்ளார்.

யாரை சொல்கிறார்?
சமூக விரோதிகள் ஊடுருவ இருப்பதாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஜெயக்குமார் குறிப்பிடுவது யாரை எனக் கேள்வி எழுந்துள்ளது. ஜெயக்குமார் சசிகலா தரப்பை சொல்கிறாரா? அல்லது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஓபிஎஸ் தரப்பினரை சொல்கிறாரா என அதிமுக தொண்டர்கள் குழம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications