செந்தில் பாலாஜி, சேகர் பாபு, முத்துசாமி, ரகுபதி! திமுகவில் அதிமுக புள்ளிகள்! இப்போ அன்வர் ராஜா வேற!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும் அமைப்பு செயலாளருமான அன்வர் ராஜா திமுகவில் இணைந்திருக்கிறார். எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் மிக பெரும் சிறுபான்மை தலைவராக விளங்கிய அவர் திமுகவில் இணைந்து இருப்பது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி, ரகுபதி, முத்துச்சாமி, தங்க தமிழ்ச்செல்வன் என அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சென்ற முக்கிய புள்ளிகளின் பட்டியல் நீண்டு வருகிறது.
அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் அன்வர் ராஜா. எம்ஜிஆர் ஜெயலலிதா காலம் தொட்டு அரசியல் செய்து வருபவர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய சிறுபான்மையின தலைவர்களில் ஒருவரான அன்வர் ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கிய அழகு பார்த்தார் ஜெயலலிதா.
அவரது மறைவுக்கு பிறகு சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் என பிளவு ஏற்பட்ட நிலையில் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். பிறகு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தஞ்சம் புகுந்த அவருக்கு கட்சியின் அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

அன்வர் ராஜா
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது. அப்போதே முதன் முதலாக எதிர்ப்புக் குரல் எழுப்பியவர் அன்வர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையின வாக்குகள் கிடைக்காது என பேசி இருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து பாஜக குறித்தும் அதிமுக பாஜக கூட்டணி குறித்தும் விமர்சித்து வந்த அன்வர் ராஜா இன்று திடீரென திமுகவில் இணைந்திருக்கிறார்.
பாஜக கூட்டணி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார். அமைசர்கள் துரைமுருகன், எவ வேலு, சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள் அவரை வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," அண்ணா தலைமையில் கருத்தியல் ரீதியாக வளர்ந்த அதிமுக இன்று பாஜகவின் கையில் சிக்கி இருக்கிறது. அதிமுக கொள்கைகளுக்கு மாறாக செயல்படுகிறது. அதிமுகவை அழிக்கும் பாஜகவுடன் கூட்டணி பொருந்தா கூட்டணி.
எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவை அழித்துவிட்டு திமுகவுக்கு எதிராக போட்டி போடுவது என்பது தான் பாஜகவின் திட்டம். இதனை தலைமைக்கு தெரிவித்தும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளேன்" எனக் கூறியிருந்தார். முன்னதாக அன்வர் ராஜா தலைமை கழகத்திற்கு சென்றதும் அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
கட்சி மாற்றம்
இது ஒரு புறம் இருக்க அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற நிர்வாகிகள் பட்டியல் நீண்டு வருகிறது. தற்போது திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் என கட்சியிலும் ஆட்சியிலும், குறிப்பிட்ட தகுந்த அளவு இடத்தை அதிமுக முன்னாள் நிர்வாகிகள் தான் பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிகே சேகர் பாபு
அமைச்சரவையை பொறுத்தவரை முத்துச்சாமி, ரகுபதி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், எவ வேலு, பிகே சேகர் பாபு ஆகியோர் அதிமுகவிலிருந்து சென்றவர்கள் தான். அதுமட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அதிமுகவில் இருந்து அமமுக சென்று அதற்கு பிறகு திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்க தமிழ்ச்செல்வன்
இது மட்டுமல்லாமல் குறிப்பிடத் தகுந்த தலைவர்களாக விளாத்திகுளம் மார்க்கண்டேயன், கோவை முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், நடராஜன்,தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன், எஸ்எம் உதயகுமார், கோவிந்தராஜன், பிகே முத்துசாமி, கே மனோகர், குப்புசாமி, செந்தில்குமார், என் கந்தசாமி, வேலுச்சாமி, பரமசிவம் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
ஜெயலலிதா மறைவு
அதுமட்டுமல்லாமல் அதிமுக முன்னாள் அமைச்சரான டிகே நடராஜன், அதிமுக முன்னாள் எம் பி கோவிந்தராஜன், தர்மபுரி அதிமுக மாவட்ட செயலாளர் எம்ஜி சேகர் என திமுகவுக்கு சென்றவர்கள் பட்டியல் தொடர்ந்து நீண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அன்வர் ராஜாவும் இணைந்து இருக்கிறார். 2016 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகும், 2019 நாடாளுமன்ற தோல்விக்கு பிறகும் பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் திமுக தரப்பில் தஞ்சம் புகுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications