ஓபிஎஸ்தான் தெரியாதுனு சொல்றாரே.. "அந்த" கேள்வியை ஏன் கேக்குறீங்க? ஆணைய வக்கீலிடம் அப்பல்லோ ஆட்சேபணை
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இதய பிரச்சினை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி எழுப்பியதற்கு அப்பல்லோ தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் ஓ பன்னீர் செல்வம் முதல்முறையாக நேற்று முன் தினம் ஆஜராகினார்.
3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் தெரியாது என்றே பதில் அளித்தார். இதையடுத்து அவர் நேற்றைய தினம் 2ஆவது நாளாக ஆஜராகி விளக்கமளித்தார்.

40 கேள்விகள்
அப்போது அவரிடம் 40க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டது. ஜெயலலிதாவுக்கு வழங்கிய உணவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஓபிஎஸ், ஜெயலலிதாவுக்கு என்ன உணவு கொடுத்தார்கள் என்பது எனக்கு தெரியாது என்றார். அப்பல்லோவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் என எப்போதாவது சசிகலா உங்களிடம் தெரிவித்தாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

சசிகலா அப்டேட்
அதற்கு ஒரு சில முறை ஜெயலலிதா நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்துள்ளார். இதை நான் சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்தேன். பொது வெளியில் எங்கும் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அவருக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டன என்ற கேள்விக்கும் அவர் தெரியாது என பதில் அளித்தார்.

இதய பிரச்சினை
ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த இதய பிரச்சினை தொடர்பாக ஓ பன்னீர் செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். அதற்கு அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் மஹிமுனா எதிர்ப்பு தெரிவித்தார். அவர் , "சிகிச்சை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என ஓபிஎஸ் ஏற்கெனவே வாக்குமூலம் அளித்துள்ளார். அது தொடர்பான கேள்விகளை அவரிடம் எப்படி எழுப்ப முடியும்" என மஹிமுனா எதிர்த்தார்.

ஆணைய வக்கீல் விளக்கம்
அதற்கு ஆணைய வழக்கறிஞர், "ஜெயலலிதாவுக்கு இருந்த உடல்நிலை பிரச்சினை தொடர்பாகவோ அதற்கு அவர் எடுத்துக் கொண்ட மருந்துகள், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தோதான் கேள்வி எழுப்பக் கூடாது. இதய நோய் இருந்தது தெரியுமா என கேள்வி எழுப்பலாம்" என்றார்.

சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை
அது போல் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஓபிஎஸ்ஸிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். அதில் சசிகலா மீதான குற்றச்சாட்டை களைய வேண்டும் என்பதற்காகத்தான் ஆணையம் அமைக்க வேண்டும் என தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி சரிதானா என கேட்கப்பட்டது. அதற்கு சரியானதுதான் என பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications