Mekedatu: "ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாதா? அரைவேக்காடு…" அமைச்சர் நிர்மல் குமாரை விமர்சித்த அப்பாவு!
சென்னை: காவிரி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்ன செய்தார் என கேட்ட நிர்மல் குமாருக்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு பதிலடி கொடுத்துள்ளார். அதில் அமைச்சரை அரைவேக்காடு அமைச்சரே என விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழக எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி, உங்கள் தந்தை, உங்கள் தாத்தா #காவேரி நீர் பெற என்ன செய்தார் என்று கேட்கும் அரைவேக்காடு அமைச்சரே!

நீங்கள் 9 வயது சின்ன பையனாக இருந்த போது 1990 ஜூன் 2-ல் காவிரி தீர்ப்பாயம் அமைத்தவர் கருணாநிதி. பக்ரா நங்கல் நதிநீர் வாரியம் போல், காவிரி நதிநீர் வாரியத்தையும் (kaveri water management board) அமைக்க 2018 பிப்ரவரி 16 தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது, பாஜக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்றி காவேரி மேலாண்மை ஆணையம் (kaveri water management authority) என்று அமைக்க கர்நாடகாவுக்கு ஆதரவாகவும் தமிழகத்திற்கு விரோதமாகவும் பாஜக துரோகம் செய்த போது #RSS இயக்கத்தில் இருந்த நீங்கள் கருணாநிதி பற்றியோ காவிரி உரிமை பற்றியோ பேச எந்த தகுதியும் உரிமையும் இல்லை.
பாஜக ஆட்சிக்கும் உங்கள் ஆட்சிக்கும் பாலமாக இருந்து உங்கள் ஆட்சியை தாங்கி பிடிக்கும் டெல்லி பிரதிநிதி பெங்களூர் வெங்கட் நாராயணா, தனிச் செயலர் ஆந்திர விஷ்ணு ரெட்டி, நீர்வளத்துறை அமைச்சர் பாண்டிச்சேரி புஸ்ஸி ஆனந்த் உட்பட நீங்கள் நால்வரும் காவேரி பிரச்சினையையும், தமிழக மக்களையும் மறந்து, #காவிரி மேகதாது படம் தயாரித்து கர்நாடகாவில் ஓட்டுவதற்கு ஒத்திகை பார்த்து கொண்டிருக்கிறீர்களா CM sir ?
"ஜனநாயகன்" பட ரிலீஸ்-க்கு முன் கர்நாடகம் சென்று உங்கள் ரசிகர்களை உற்சாகமூட்டிய முதலமைச்சரே! தற்போது முடங்கிக் கிடக்கும் படத்தை ஓட்டுவதற்காக மீண்டும் கர்நாடகம் செல்ல துடிக்கிறீர்களா CM Sir ?
தமிழக உரிமைகளை தொடர்ந்து ஒன்றிய அரசிடம் பறிகொடுத்து வரும் உங்கள் முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேகதாது அணை குறித்து உதயநிதி சமூகவலைதளத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.
இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.
கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த #SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.
இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.
எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி கேட்டுக் கொண்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமாரிடம் உதயநிதி ட்வீட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் மேகதாது என்றால் என்னவென்றே ஸ்டாலினுக்கு தெரியாது, உதயநிதியிடம் கூட போய் கேட்டு பாருங்க, உங்க தாத்தா 1970-ல் என்ன செய்தார் என கேட்டு பாருங்கள். அவருக்கு தெரியாது. புரிதலின்றி அவர் பேசுகிறார் என நிர்மல் குமார் விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து உதயநிதியிடம் கேட்ட போது பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் அளிக்காமல் அவர் சென்றுவிட்டார். காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடகா அநியாயம் செய்கிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கர்நாடகா செல்வார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications
