அதிமுகவில் அடுத்த விக்கெட்.. கட்சியிலிருந்து விலகுவதாக கொள்கை பரப்பு துணை செயலாளர் அப்சரா அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் பதவி வகிந்து வந்த திருநங்கை அப்சரா ரெட்டி அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். மனசாட்சிக்கும், கொள்கைகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்றும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அப்சரா, எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது 47 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் தவெக அரசுக்கு வாக்களித்தனர். இதன் மூலம் அதிமுகவில் பிளவு வெளிச்சத்துக்கு வந்தது.

AIADMK Apsara TVK EPS

தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கரூர் ஆகிய தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் ஐக்கியமாயினர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவுக்கு தாவி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுவில் இருந்து விலகுவதாக மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் அப்சரா ரெட்டி தெரிவித்துள்ளார். திருநங்கையான அப்சராவை அதிமுகவின் செய்தி தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நியமித்திருந்தார். அதோடு, கடந்த ஜூலை மாதம் அவருக்கு துணை கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பை வழங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் அப்சரா. இதுதொடர்பாக அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மிகுந்த வருத்தத்துடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன். அதிமுகவுடனான எனது தொடர்பு ஒருபோதும் வெறும் அரசியல் சார்ந்ததாக இருந்ததில்லை. அது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது நான் கொண்டிருந்த ஆழ்ந்த மரியாதை, அன்பு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையில் வேரூன்றியதாகும். அவரை நான் எப்போதுமே எனது அரசியல் உத்வேகமாகவும் தலைவராகவும் கருதி வந்துள்ளேன்.

மக்கள், கண்ணியம், அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் மற்றும் சேவை ஆகியவற்றில் வேரூன்றிய அரசியல் குறித்த ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை நான் எப்போதுமே நம்பி வந்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை, அரசியல் என்பது உடைப்பதாக அல்ல, உருவாக்குவதாக இருக்க வேண்டும். விலக்குவதாக அல்ல, உள்ளடக்குவதாக இருக்க வேண்டும். மேலும், பிளவுகளை உருவாக்குவதற்குப் பதிலாக மக்களை ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டும்.

மேலும், கட்சியுடனான எனது தொடர்பு முழுவதும் நீங்கள் எனக்கு அளித்த கண்ணியம், அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் மரியாதைக்காக எனது மனமார்ந்த நன்றியைப் பதிவு செய்கிறேன். உங்கள் மீதான எனது தனிப்பட்ட மரியாதையும் மதிப்பும் அசைக்க முடியாததாகவே உள்ளது.

இந்த முடிவு கசப்புணர்ச்சியாலோ அல்லது அவமரியாதையாலோ எடுக்கப்பட்டதல்ல. எனது நம்பிக்கைகளுக்கும், எனது பொது வாழ்க்கைக்கு வழிகாட்டிய கொள்கைகளுக்கும் உண்மையாக இருப்பதற்காக, உணர்வுப்பூர்வமாகவும் ஆழ்ந்தும் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும். என் வாழ்வின் ஒரு முக்கிய அத்தியாயத்தை வடிவமைத்த வாய்ப்புகள், பொறுப்புகள், நட்புகள் மற்றும் அனுபவங்களுக்கு நன்றியுடன் கட்சியை விட்டு விடைபெறுகிறேன். அதிமுகவுடனான என் தொடர்பையும், என்னுடன் இணைந்து பணியாற்றும் பாக்கியம் பெற்ற மக்களையும் நான் என்றும் போற்றுவேன்.

என் அரசியல் பயணம் இப்போது வேறு திசையில் செல்லக்கூடும், ஆனால் மக்களுக்குச் சேவை செய்வதற்கான என் அர்ப்பணிப்பு மாறாமல் உள்ளது. மக்களுடன் துணை நிற்பதற்கும், கேட்கப்பட வேண்டிய குரல்களை உரக்க ஒலிப்பதற்கும், பாலங்களைக் கட்டுவதற்கும், துணிவு, கருணை மற்றும் கண்ணியத்துடன் சேவை செய்வதற்கும் அம்மாவின் அடிச்சுவடுகளை நான் தொடர்ந்து பின்பற்றுவேன். இந்த அரசியல் முடிவுக்குப் பிறகும் நமக்கிடையேயான தனிப்பட்ட அன்பும் மரியாதையும் நீடிக்கும் என்று நான் மனதார நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

விரைவில் அப்சரா ரெட்டி தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக அதிமுக ஐடி விங் முன்னாள் செயலாளரும், முன்னாள் மாணவரணி செயலாளருமான சிங்கை ராமச்சந்திரன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+