ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி.. காண முடியாதவருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் நடத்தப்பட இருந்தது. ஆனால் மழை காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. மீண்டும் செப்டம்பரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆனால் பலராலும் நிகழ்ச்சியை காண முடியவில்லை.. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை ரூ.10,000 டிக்கெட் எடுத்தும் காண முடியாதவருக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர், அதே ஆண்டில் செப்டம்பர் 10-ம் தேதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் பெற்ற டிக்கெட்டுடன் வரலாம் என அறிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் அப்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என பல்லாயிர ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக புகார் எழுந்தது.. கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் பலருக்கும் மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் விமர்சித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் மன்னிப்பு கோரியது. அதேபோல் ஏஆர் ரகுமானும் நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்தார்.
அப்போது இது பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு சுனாமி போல் வந்த மக்களின் அன்பு வெள்ளத்தை எங்களால் கையாள முடியவில்லை . நடந்த சம்பவத்துக்காக மிகவும் வருந்துகிறேன். பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம் ஆகும் இந்தக் குளறுபடிகளுக்காக நான் வேறு யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. அதேநேரம், நகரம் விரிவடையும் போது இசை மற்றும் கலையை நேசிக்கும் ரசனையும் விரிவடைந்துள்ளதை உணர்கிறேன் என்று கூறினார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு வாகன நிறுத்த வசதியுடன் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் டிக்கெட் எடுத்திருந்த சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த அர்ஜுன், ஆகஸ்ட் 12-ம் தேதி முறையான முன்னறிவிப்பு செய்யவில்லை என்றும், செப்டம்பர் மாதம் நடந்த போது போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சியை கண்டு ரசிக்க முடியாததாலும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திருப்பித் தர கோரியும் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த புகாரை விசாரித்த சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஏசிடிசி. நிறுவனம், 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாகவும், 5 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவாகவும் மொத்தம் 55 ஆயிரம் ரூபாயை இரண்டு மாதங்களில் மனுதாரர் அர்ஜுனுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications