ஆரணி அதிமுக கஜேந்திரன் எடப்பாடிக்கு தந்த ரூ.18 லட்சம் சர்ப்ரைஸ்.. விருப்ப மனு வழங்க இன்றே கடைசி நாள்
சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இந்த விருப்ப மனு கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.. விருப்ப மனுக்களை வழங்க 23ம் தேதியே கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைய தினம் ஏராளமான அதிமுகவினர் விருப்ப மனுவை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது.. கூட்டணி குறித்த விவரங்கள் சூடுபிடித்துள்ளன.. சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதிமுக கூட்டணி
அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையலாம்" என்று அழைப்பு விடுத்திருந்தார்.. அந்தவகையில் தவெக அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே துவக்கிய அதிமுக, இப்பொழுது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
விருப்ப மனுக்கள்
அந்தவகையில் கடந்த 15ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து விருப்ப மனுக்களை அதிமுகவினர் தாக்கல் செய்து வருகின்றனர்.
கடந்த 19ம் தேதி அமாவாசை என்பதாலும், அனுமன் ஜெயந்தி என்பதாலும், வெள்ளிக்கிழமை என்பதாலும் ஏராளமானோர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர்.. மனு தாக்கல் செய்ய வரும்போது, பலரும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போல வேடமிட்டு வருகின்றனர்.. இதனால் இவர்களை பார்க்க அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் கூட்டம் கூடிவிடுகிறது..
ஹைலைட் - எடப்பாடி பழனிசாமி
நேற்றைய தினமும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராமலிங்கம், அதிமுக அமைப்பு செயலாளர் வெங்கடேஷ் பாபு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் கோயம்புத்தூர் சத்யன், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், ஏற்காடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சித்ரா, அமைப்புச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், நீலகிரி மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் விருப்பம் மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளித்தனர்.
இதில் ஹைலைட் என்னவென்றால், விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யும் பலரும் தங்கள் பெயரில் ஒரு விருப்ப மனு தாக்கல் செய்வதுடன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் ஒரு விருப்ப மனுவை தாக்கல் செய்து வருகிறார்கள்.
ஆரணி கஜேந்திரன் - ரூ.18 லட்சம்
அந்தவகையில், ஆரணி தொகுதியை சேர்ந்த அதிமுகவின் ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி. கஜேந்திரன், தங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிச்சாமி 120 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட ரூபாய் ஒரு தொகுதிக்கு 15,000 என 120 தொகுதிக்கு 18 லட்சத்துக்கு வரைவோலை எடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு தந்திருக்கிறார்.. அத்துடன் ஆரணி தொகுதியில் தான் போட்டியிட ஆரணி ஜி.வி. கஜேந்திரன் விருப்ப மனுவும் தந்துள்ளார்.
அந்தவகையில் 234 தொகுதிகளில் அது என்ன 120 தொகுதிகளில் மட்டும் எடப்பாடி பெயரில் விருப்பமனு தரப்பட்டுள்ளது..
விருப்ப மனு - இன்றே கடைசி நாள்
அதிமுக விருப்ப மனு ரூ.15,000-க்கும், புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான விருப்ப மனு ரூ.5000-க்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுகவினர் அளித்து வரும் விருப்ப மனுக்களை அமைப்பு செயலாளர்கள் முன்னின்று பெற்று வருகின்றனர்.
கடந்த 15ம் தேதி தொடங்கிய விருப்ப மனு விநியோகம் இன்றுடன் நிறைவடைகிறது. எனவே போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, ரூ.15,000க்கு வரைவோலை எடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. விருப்ப மனுக்களை வழங்க இன்றே கடைசி நாள் என்பதால் , ஏராளானோர் மனு தாக்கல் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications