முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த ஆரணி MLA ஜெயசுதா! பரபரத்த சட்டசபை! சலசலத்த அதிமுக! கூலான இபிஎஸ்!
சென்னை: தமிழக சட்டசபை முடிந்தவுடன் முதல்வர் விஜய்யை அவரது அறையில் ஆரணி எம்எல்ஏ ஜெயசுதா சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதற்கான உண்மையான காரணத்தை பார்க்கலாம்.
அதிமுகவின் ஒரே பெண் மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார் ஜெயசுதா. அதில் திருவண்ணாமலை மத்திய மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் ஜெயசுதா. பி.ஏ. பட்டதாரி! இவருக்கு 51 வயதாகிறது. இவரது கணவர் லட்சுமி காந்தனும் அதிமுகவில் செயல்பட்டு வருகிறார்.

ஜெயசுதா, கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் அதிமுகவுக்காக பணியாற்றி வருகிறார். 2007ஆம் ஆண்டு போளூர் ஒன்றிய மகளிரணி செயலாளராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார்.
இவரது செயல்பாட்டை அறிந்த ஜெயலலிதா, கடந்த 2011 ஆம் ஆண்டு போளூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். அவரும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் எதிரொலி மணியனை விட 28545 வாக்குகள் அதிகம் பெற்று போளூர் எம்எல்ஏவானார்.
ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயசுதாவுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதில் போளூர் தொகுதியில் சி.எம்.முருகன் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கே.வி.சேகரன்தான் போளூர் தொகுதியில் வென்றார்.
இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக மகளிரணி துணைச் செயலாளராக ஜெயசுதா நியமிக்கப்பட்டார். கடந் 2021 ஆம் ஆண்டு போளூர் தொகுதியில் போட்டியிட ஜெயசுதா மீண்டும் வாய்ப்பு கேட்ட போது அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு அந்த வாய்ப்பு சென்றுவிட்டது.
இவர் மீது வழக்குகள் இருந்ததால்தான் அவருக்கு ஜெயலலிதா சீட் வழங்கவில்லை. எனினும் 2021 இல் 43 சதவீத வாக்குகள் பெற்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி வென்றார்.
இதனால் அதிருப்தியில் இருந்த ஜெயசுதாவுக்கு திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி அளித்தார். அதன்படி ஆரணி, போளூர் ஆகிய இரு தொகுதிகளுக்கும் மாவட்டச் செயலாளர் ஜெயசுதாதான்.
இந்த நிலையில் கடந்த 2026ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஜெயசுதாவுக்கு ஆரணி தொகுதி ஒதுக்கப்பட்டு அவரும் வெற்றி பெற்றார். தற்போது சட்டசபை கூட்டத் தொடரில் ஆரணிக்கான கோரிக்கைகளை மூச்சுவிடாமல் படித்து சிரித்தபடியே அமைச்சர்களிடம் பாசிட்டிவ்வான பதிலை பெற்றுக் கொள்கிறார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் முதல்வர் விஜய்யை ஜெயசுதா சந்தித்து பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதாவது ஜெயசுதாவும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய போகிறாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஜெயசுதா சந்திப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தே நடந்தது என்பதால் அவர் கூலாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் ஜெயசுதாவோ, விஜய்யிடம், " திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து ஆரணியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அறிவிக்க வேண்டும்" என்ற கோரிக்கையை விடுத்தாராம். இந்த கோரிக்கை நீண்டகாலமாக ஆரணி மக்கள் முன் வைத்துள்ளனர். ஒவ்வொரு ஆட்சியிலும் இந்த அறிவிப்பு வருமா என்பதை எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் தற்போது ஆரணி மக்களின் குரலாக ஜெயசுதா ஒலித்து வருகிறார். அவரது அணுகுமுறையால் நிச்சயம் ஆரணி மாவட்டமாகும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். ஆரணி மாவட்டத்தில் ஆர்டிஓ, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளன. இது ஒரு கல்வி மாவட்டமாகும்.
ஆரணி நகராட்சி ஆண்டுக்கு 12 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டித் தருவதால் அந்த ஆரணியை தனி மாவட்டமாக பிரித்து அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications
