வெங்காயத்தை சுற்றி கருப்பு கலர்.. அதை பயன்படுத்துவது பாதுகாப்பானதா? 99% பேருக்கு தெரியாத உண்மை
சென்னை: நாம் தினசரி சமையலுக்குப் பயன்படுத்தும் வெங்காயத்தில் கருப்பு கலரில் திட்டுகள் இருப்பதை நாம் கவனித்திருப்போம். பலருக்கும் இந்தக் கருப்பு நிறத்திற்கான காரணமும் தெரியாது.. இதைச் சாப்பிடலாமா, வேண்டாமா என்பதும் தெரியாது.. வெங்காயத்தில் இதுபோல கருப்பு கலர் வர என்ன காரணம்.. இதைச் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்பது குறித்தும் மருத்துவர் விளக்கமளித்துள்ளார். அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியச் சமையல்களில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக இருப்பது வெங்காயம்.. சைவம் அல்லது அசைவம் என எது சமைத்தாலும் பெரும்பாலான உணவுகளில் வெங்காயம் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட வெங்காயங்களில் கருப்பு கலர் திட்டுக்களை நாம் கவனித்திருப்போம்.. வெளிப்புறமும் சில நேரங்களில் உள்ளேயும் கூட இதுபோல திட்டுகள் இருப்பதை நாம் நோட் செய்திருப்போம்.

கருப்பு கலர் வெங்காயம்
இப்படிக் கருப்பு கலர் திட்டுகள் இருந்தால் அதைச் சாப்பிடலாமா.. அது பாதுகாப்பானதா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கும்.. அதற்கான பதிலைப் பார்க்கும் முன்பு, முதலில் இந்த கருப்பு கலர் ஏன் ஏற்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.. இதுபோல கருப்பு கலரில் திட்டுக்கள் ஏற்படுவது சாதாரணமானது தான் என்றே ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். வெப்பமான, ஈரப்பதமான சூழ்நிலைகளில் ஒரு வகைப் பூஞ்சையால் இப்படிக் கருப்பு திட்டு ஏற்படுகிறதாம்.. இது ஆபத்தானது இல்லை என்றாலும் நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
காரணம் பூஞ்சை
இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பாரதி குமார் பிரபல ஆங்கில ஊடகத்திடம் கூறுகையில், "அஸ்பெர்கிலஸ் நைஜர் (Aspergillus niger) என்ற ஒரு வகைப் பூஞ்சை காரணமாகவே இதுபோன்ற கருப்பு கலர் ஏற்படுகிறது. வெப்பமான, ஈரப்பதமான, காற்றோட்டமில்லாத இடங்களில் இந்தப் பூஞ்சை வளரும். இது வெங்காயத்தின் வெளிப்புற அடுக்குகளில் கரிய தூள் போன்ற புள்ளிகளை உருவாகி, கரி போன்ற தோற்றத்தை அளிக்கிறது" என்றார்.
இது சிறியளவில் மட்டும் இருந்தால் இதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும், இதுபோல கருப்பு கலரில் இருக்கும் வெங்காயத்தை நாம் அதிகளவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது ஆக்ராடாக்சின் ஏ (ochratoxin A) எனப்படும் நச்சை உற்பத்தி செய்யக்கூடும். இது சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கு ஆபத்தாக முடியலாம் என்றும் சொல்கிறார்கள்.
சமைத்தாலும் அழியாது
பாரதி குமார் மேலும் கூறுகையில், "சமைத்தாலும் இந்த நச்சு முழுமையாக அழியாது. எனவே, சமைப்பதன் மூலம் அதை நீக்க முடியாது. எனவே, வெங்காயத்தைச் சரியான இடத்தில் சேமித்து வைப்பதும்.. சமையலுக்கு முன் சரியாக அதை செக் செய்வதும் முக்கியம்" என்றார்.
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் வெங்காயத்தில் வெளிப்புறம் மட்டும் கருப்பு நிறம் இருந்தால் பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கிவிட்டு மீதமுள்ள பகுதியைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.. அதேநேரம் அந்த கருப்பு கலர் உட்புற அடுக்குகளுக்கும் பரவி, வெங்காயம் மென்மையாகவும், அழுகிய நிலையிலும் இருந்தால், அதை உடனடியாகத் தூக்கி வீசிவிடுவதே நல்லது.. இது பல உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.
எப்போது தூக்கி வீச வேண்டும்!
வெங்காயத்தில் வெளிப்புறம் மட்டும் கருப்பு கலர் இருக்கும்போது அதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது தான் என்றாலும் இதில் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.. வெங்காயத்தை நன்கு உரித்து, கழுவி, உடனடியாகச் சமைக்க வேண்டும். உரித்துவிட்டு அப்படி விட்டால் அது சிக்கலையே தரும் என்கிறார்கள் மருத்துவர்கள்!
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், நுரையீரல் அல்லது கல்லீரல் நோய் உள்ளவர்கள் இதுபோன்ற கருப்பு நிறத்தில் இருக்கும் வெங்காயம் அல்லது எந்தவொரு கெட்டுப்போன பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை மருத்துவ ஆலோசனையாக யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உங்களுக்கு உடல்நிலை பாதிப்பு எதாவது ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரிடம் செல்லுங்கள்.












Click it and Unblock the Notifications