நெருங்கி வரும் 7 அம்புகள்! எடப்பாடிக்கு எதிர்பார்க்காத சிக்கல்! ஒரே நேரத்தில் இவ்வளவு பிரச்சனைகளா?
சென்னை: அதிமுக "இணை ஒருங்கிணைப்பாளர்" எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 7 முக்கியமான விஷயங்கள் திரும்பி வருகின்றன. இன்று சற்று முன் நடந்த ஒரு சம்பவம் உட்பட பல்வேறு விஷயங்கள் எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளன. இதை எடப்பாடி எப்படி சமாளிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு மனுஷனுக்கு வாழ்க்கையில் பிரச்சனை வரலாம்.. பிரச்சனையே வாழ்க்கையா இருக்க கூடாது என்று சொல்வார்கள். அப்படித்தான் எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது கிட்டத்தட்ட அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளும் பிரச்சனையாக மாறி உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வில் தோல்வி அடைந்துவிட்டார். இதன்பின் ஒரு முறை செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
ஆனால் அதை தவிர்த்து பெரிதாக எடப்பாடி பழனிசாமி வெளியே வரவில்லை. சேலம் வீட்டில்தான் அவர் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார். மொத்தம் 7 விஷயங்கள் அவருக்கு சிக்கலாக மாறி உள்ளன.

அம்பு 1 - வழக்கு
முதல் விஷயம் பொதுக்குழு வழக்கு. இந்த பொதுக்குழு வழக்கில் இடைக்கால தடை விதிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்தார். ஆனால் இன்று இரட்டை நீதிபதி அமர்வில் தனி நீதிபதி அமர்வின் முந்தைய தீர்ப்பிற்கு இடைக்கால தடை எதுவும் விதிக்கப்படவில்லை. மாறாக இறுதி விசாரணை நேரடியாக வரும் வியாழக்கிழமை நடக்கும் என்று கூறப்பட்டுவிட்டது. இதனால் இடைப்பட்ட காலத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட முடியாது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று வந்த தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதிக்கப்படும் என்று எடப்பாடி தீவிரமாக நம்பினார். ஆனால் அது நடக்கவில்லை. இது எடப்பாடிக்கு பெரிய சிக்கலாகி உள்ளது.

அம்பு 2 - நிர்வாகிகள்
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து ஓ பன்னீர்செல்வம் பக்கம் செல்லும் நிர்வாகிகளை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். வரிசையாக சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் எடப்பாடி கேம்பில் இருந்து வெளியேறி ஓ பன்னீர்செல்வம் பக்கம் செல்கிறார்கள். தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்ததால் இந்த மாற்றம் நடக்கிறது. இப்படி அணி மாறும் நிர்வாகிகளை பிடித்து இழுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் எடப்பாடி.

அம்பு 3 - ரெய்டு
இது போக தன்னுடன் இருக்கும் நிர்வாகிகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டிய கட்டாயமும் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. காமராஜ், முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கர், செய்யாத்துரை, எஸ். வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. அதேபோல் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிய சிபிஐ தயாராக உள்ளது. இப்படி தனக்கு நெருக்கமான நபர்கள் எல்லோரும் வழக்குகளில், ரெய்டுகளில் சிக்குவதால்.. அவர்களை காக்க வேண்டிய கட்டாயமும் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது.

அம்பு 4 - டெண்டர் வழக்கு
இவர்களுக்கு மட்டுமின்றி தனக்கு எதிராக வரும் ரெய்டு அம்புகளையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது.அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. மிக முக்கிய துறையான இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக தரப்பு தொடர்ந்து புகார் வைத்து வருகிறது. இதையடுத்து 2018ல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 4800 கோடி ரூபாய் அளவிற்கு நெடுஞ்சாலை துறை டெண்டரில் முறைகேடு நடந்தாக எடப்பாடிக்கு எதிராக ஆர். எஸ் பாரதி புகார் வைத்தார். இது போக கூடுதலாக அறப்போர் இயக்கும் வேறு டெண்டர் முறைகேட்டு புகார்களை இவர் மீது வைத்துள்ளது. இதில் எப்போது வேண்டுமானாலும் எடப்பாடி மீது ரெய்டு நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.

அம்பு 5 - கோடநாடு
இது போக கோடநாடு வழக்கிலும் வேகமாக விசாரணை நடந்து வருகிறது. இதில் அண்டை மாநிலங்களில் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. வழக்கு விசாரணையில் எங்கும் சறுக்கிவிட கூடாது என்பதால் வழக்கை ஆளும் தரப்பு மிக தீவிரமாக கட்டமைத்து வருகிறது. இதில் எப்போது வேண்டுமானாலும் எடப்பாடி பழனிசாமி நேரடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வாய்ப்புகளும் உள்ளன. இந்த அம்பும் எடப்பாடியை நோக்கித்தான் வேகமாக வந்து கொண்டு இருக்கிறது.

அம்பு 6 - தூத்துக்குடி துப்பாக்கி சூடு
இது போக தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை வெளியாகி உள்ளது. போலீஸ் இதில் எவ்வளவு அலட்சியமாக செயல்பட்டது. முன்னாள் அதிமுக அரசு இதில் எப்படி வேடிக்கை பார்த்தது என்று பல விஷயங்கள் இதில் வெளியாகி உள்ளன. இந்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பின் அது சட்டசபை ஆவணமாக மாறும். இது அரசியல் ரீதியாக எடப்பாடிக்கு மிகப்பெரிய கரும்புள்ளியாக பார்க்கப்படுகிறது. இந்த ஆவணத்தில் கசிந்த தகவல்கள் போக மற்ற தகவல்களும் முழுமையாக வெளியே வரும் போது அதில் பல பூதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பு 7 - ஜெயலலிதா மரணம்
இது போக ஜெயலலிதா நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையும் இன்று அல்லது நாளை தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதில் ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துமனை ஜெயலலிதாவிற்கு சிறப்பான சிகிச்சை வழங்கிவிட்டதாக கூறி உள்ளது. இதன் காரணமாக ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்பது போன்ற பிம்பம் வர தொடங்கி உள்ளது. இதனால் சசிகலா மேலே இருந்த கத்தியும் விரைவில் அகலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவிற்கு "கிளீன் சீட்" கொடுக்கப்பட்டால் அது ஒரு வகையில் எடப்பாடி பழனிசாமி பின்னடைவாக பார்க்கப்படும். விரைவில் இதில் வெளியாகும் அறிக்கை தமிழ்நாடு அரசியலை புரட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications