"விலாங்கு மீன்" நழுவுதே.. மாஸ்டர் பிளான் பாஜக.. அதிமுக கூட்டணி உடையுதா? அங்கிட்டு 15 தொகுதி இருக்கே?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு படுகுஷியிலும், ஓபிஎஸ் தரப்பு படுசோகத்திலும் உள்ள நிலையில், பாஜகவின் தலையீடு இனி அதிகம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதற்கு என்ன காரணம்?
மேற்கு மண்டலத்தில் தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் நோக்கில் அடுத்த மாநாட்டை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பான ஆலோசனை கூட்டமும் நடந்து முடிந்த நிலையில், செப்டம்பர் 3ம் தேதி காஞ்சிபுரத்தில் பலத்தை காட்ட ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளது.

காரணம், சென்னை, காஞ்சிபுரம் போன்ற பகுதிகள் எல்லாம், எடப்பாடியின் கோட்டையாக கருதப்படுகிறது. கொங்குவில் எடப்பாடிக்கு செல்வாக்கு உள்ளதைபோல சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலும் ஓரளவு பலம் இருக்கவே செய்கிறது. அப்படிப்பட்ட மேற்கு மண்டலத்தில், தங்களுக்கும் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓபிஎஸ் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான், அடுத்த மாநாட்டை மேற்கு மண்டலம் பக்கம் திருப்பியுள்ளதாக சொல்கிறார்கள்.
சீட் கணக்கு: இந்த கூட்டத்தை நடத்துவதன் மூலம், எடப்பாடி தரப்புக்கு செக் வைப்பதுடன், தங்களுடைய செல்வாக்கை பாஜகவுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பிலும் ஓபிஎஸ் டீம் உள்ளதாம். எனவே, எம்பி தேர்தலுக்கான சீட் கணக்கு வரை இந்த மாநாட்டின் திட்டம் போடப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்றைய தினம் பொதுக்குழு தீர்ப்பு வந்துள்ளது.. பொதுக்குழு தீர்மானத்துக்கு தடை விதிக்க முடியாது என்று சொல்லி, ஓபிஎஸ்ஸின் அப்பீல் மனுக்களை எல்லாம் ஹைகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.
அப்செட்: அதிமுக விவகாரத்தில் ஏற்கனவே கடும் பின்னடைவை தொடர்ந்து சந்தித்து வரும் ஓபிஎஸ் தரப்பினர் , இந்த தீர்ப்பை கேட்டதுமே அப்செட் ஆகிவிட்டார்களாம். ஓபிஎஸ்ஸும் அதிர்ச்சியில் உள்ளதாக சொல்கிறார்கள். இனி என்ன செய்ய போகிறார்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.. ஏற்கனவே, ஓபிஎஸ், தினகரனுடன் கூட்டணி வேண்டாம் என்று தொடர் பிடிவாதத்தில், எடப்பாடி பழனிசாமி இருந்துவரும்நிலையில், நேற்றைய தின தீர்ப்பு கூடுதல் பலத்தை எடப்பாடிக்கு தந்துள்ளது.
ஓபிஎஸ் இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்தாலும்கூட, சிவில் வழக்குகளை பொறுத்தவரை உடனடியாக தீர்ப்புகளும், முடிவுகளும் கிடைத்துவிடுவதில்லை. அதனால், இரட்டை இலை யாருக்கு? என்ற விவகாரம் நீண்டுகொண்டேதான் போக வாய்ப்புள்ளது. அதேசமயம், எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.
செல்வாக்கு: பாஜகவை பொறுத்தவரை, இந்த முறை தென்மண்டலத்தில் காலூன்றுவதற்கான முயற்சிகளை கடந்த ஒருவருட காலமாகவே எடுத்து வருகிறது. ஓபிஎஸ்ஸுக்கான நிஜபலமும், சொந்த செல்வாக்கும், ஓட்டு வங்கியும் எவ்வளவு இருக்கிறது என்று இதுவரை உறுதியாக தெரியாத சூழலில், அவரை தவிர்க்கவும் முடியாமல் பாஜக உள்ளதாக தெரிகிறது.
அதேபோல கடந்த முறை தினகரன் பிரித்த ஓட்டுக்கள், பெரும்பாலும், அதிமுக + திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் என்பதை மறந்துவிட முடியாது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை பிரித்ததே தினகரன்தான்.. அந்தவகையில் முக்குலத்தோர் ஆதரவு வாக்குகளை அவ்வளவு லேசில் இழந்துவிட பாஜக விரும்பவில்லை..
தினகரன்: அதேபோல, ஓபிஎஸ் + தினகரனை கழட்டிவிட்டுவிட்டால், தென்மண்டலங்களில் கிட்டத்தட்ட 15 தொகுதிகளில், அதிமுக சறுக்கலை சந்திக்கும் என்றும், அந்த 15 இடங்களிலும் திமுகவுக்கு களம் சாதகமாகிவிடும் என்றும் பாஜக நினைக்கிறது. அதனாலேயே டிடிவி தினகரன் + ஓபிஎஸ்ஸை தங்களுடன் அணி சேர்க்க முயல்வதாக தெரிகிறது.
உற்சாக எடப்பாடி : ஆனால், இதற்கு எடப்பாடியே ஒப்புக் கொண்டுவிட்டாலும்கூட, எடப்பாடி + ஓபிஎஸ் + தினகரன் என அனைவரையும் ஒன்று சேர்த்தாலும், அதிமுகவின் பழைய வாக்கு வங்கி வருமா? என்பதும் சந்தேகம் தானாம்.
மதுரை மாநாட்டில், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் குறித்தெல்லாம் பெரிதாக காட்டம் தெரிவிக்காத எடப்பாடி பழனிசாமி, நேற்றைய தினம் தீர்ப்பு வந்ததுமே, நிதி + தர்மம் + உண்மை காரணமாகவே இந்த நியாயம் தங்களுக்கு கிடைத்துள்ளதாக கூறியிருந்ததை பாஜகவும் கவனிக்காமல் இல்லை.
டிடிவி தினகரன்: இந்த நேரத்தில் இன்னொன்றையும் நாம் இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது.. சில நாட்களுக்கு முன்பு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார்.
அப்போது அவர், "பெரம்பலூரில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும், அதிமுகவுக்கு மொத்தமே 10 சதவீதம் வாக்கு உள்ளது.. சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காற்காடு, தென் ஆற்காடு, தருமபுரி, சேலத்தில் 10 சதவீத வாக்கு உள்ளன. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு தொகுதிகளில் 15 சதவீதம் மட்டுமே உள்ளன.. பாமக இல்லாமல் வட தமிழகத்தில் அதிமுகவால் வாக்கு பெற முடியாது. எடப்பாடி தொகுதியிலேயே பாமக ஆதரவால் தான் பழனிசாமி வெற்றி பெற்றார்" என்று கூறியிருந்தார்.
பாமக கொங்கு: கொங்குவிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு வங்கி பலமாக இல்லை என்பது, ஈரோடு இடைத்தேர்தலில் நிரூபணமானாலும், தினகரன் சொல்வது போல், பாமகவை தவிர்த்துவிட்டு, "அதிமுக கொங்கு"வை எடை போட முடியாது.
அதனால், "ஒருங்கிணைந்த அதிமுக" என்ற வியூகத்தை நோக்கி, பாஜகவின் அரசியல் காய்நகர்த்தல், மேலும் அழுத்தம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அப்படியே அனைவரும் ஒன்று சேர்ந்தாலும், அந்தந்த கட்சிகளின் தொண்டர்கள் ஒத்துழைப்பு தந்து களப்பணியில் ஈடுபடுவார்களா? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!


Click it and Unblock the Notifications
