தினகரன், பன்னீருக்கு "மெசேஜ்".. ஒரே அறிவிப்பில் மொத்தமாக நடக்கும் "பிக் சேஞ்ச்".. எடப்பாடி வீசிய வெடி
சென்னை: எடப்பாடி பழனிசாமி, மாநில மாநாட்டை அறிவித்துள்ளார்.. இதற்கு என்ன காரணம் என்பது குறித்த அலசல்கள் தமிழக அரசியல் களத்தில் உலா வர துவங்கி உள்ளன.
நேற்றைய தினம் அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. ஆனால், இதில் மிக முக்கியமானது, ஆகஸ்ட் 20ம் தேதி மாநில மாநாட்டினை மதுரையில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை எல்லாம் விட்டுவிட்டு, மதுரையில் ஏன் எடப்பாடி பழனிசாமி இந்த மாநாட்டை நடத்த பிளான் செய்கிறார் என்பதுதான் தற்போது பேசுபொருளாகி வருகிறது.
சாதி முத்திரை: தன் ஆட்சி காலம் இருந்தவரை கொங்கு மண்டலத்தை தூக்கிப்பிடித்து வந்தார்.. இதுதான் அவரது தேர்தல் தோல்விக்கும் காரணமாக அமைந்துவிட்டது.. கொங்கு மண்டலத்துக்கு தந்த முக்கியத்துவத்தினால்தான், சீனியர் தலைவர்கள் வைத்திலிங்கம் உட்பட பலரும் ஓபிஎஸ் பக்கம் தாவ நேர்ந்தது.. அதனால், கொங்கு முத்திரையை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, மாநாட்டை மதுரை பக்கம் நடத்த திட்டமிட்டுள்ளாராம் எடப்பாடி.

ஓபிஎஸ் பழனிசாமிக்கு தென்மண்டலங்களில் ஆதரவு இருப்பதாக சொல்லப்பட்டாலும், அது எந்த அளவுக்கு என்று உறுதியாக தெரியவில்லை.. காரணம், தேர்தல்களில்தான் அவரது பலம் முழுமையாக தெரியும்.. எனினும், தேவர் சமூக வாக்குகள் கணிசமாக இருப்பதாக நம்பப்படுகிறது.. அந்த வாக்குகளை தன்பக்கம் திருப்பவே, உதயகுமார் உள்ளிட்டோருக்கு முக்கிய பொறுப்புகளை எடப்பாடி தந்து வருகிறார்.. எனினும் கடந்த ஒரு வருட காலமாகவே, தென்மண்டலத்தில் தனக்கான ஆதரவை எடப்பாடியால் பெற முடியவில்லை.. ஓபிஎஸ் தரப்பிலுள்ளவர்களையும் இதுவரை தன்பக்கம் இழுக்க முடியவில்லை. எனவே, இதற்கும் செக் வைக்கவே, இந்த மாநாட்டை கூட்டுவதாக சொல்கிறார்கள்.

சென்ட்டிமென்ட்: இதற்கான ஏற்பாடுகளை, உதயகுமாரிடம் தந்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.. காரணம், அதிமுக பொதுக்குழு வழக்கில் சுப்ரீம்கோர்ட்டில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தபோது, மதுரையில் உதயகுமார் மகளின் திருமண விழாவில் பங்கேற்றிருந்தார் எடப்பாடி பழனிசாமி.. திருமண மேடையிலேயே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அறிவிக்கப்படவும், அரங்கத்தில் இருந்தவர்கள், கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.. அதனால்தான், சென்டிமென்ட்டாக இந்த முறையும் மதுரையில் மாநாடு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.
இதற்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் போட்டதுமே, எடப்பாடி பழனிசாமியும் மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டியிருந்தார்.. இப்போது ஓபிஎஸ், மாநாடு அறிவித்து அதற்கான வேலையில் இறங்கியதுமே, எடப்பாடி பழனிசாமியும் மாநாடு அறிவித்துள்ளார் என்கிறார்கள்.. இதன்மூலம் தென்மண்டலத்தில் பலத்தை அதிகரித்து, ஓபிஎஸ்ஸைவிட, தனக்கு அதிக பலம் என்பதை, பாஜக மேலிடத்துக்கு காட்ட போகிறாராம்.. இதன்மூலம், கூட்டணியில் ஓபிஎஸ்ஸை இணைக்க மேலிட தலைவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்றும் நம்புகிறாராம்.

டிடிவி தினகரன் : அதுமட்டுமல்ல, இதில் தினகரனுக்கும் செக் வைக்க போகிறதாம் எடப்பாடி டீம்.. சில நாட்களுக்கு முன்பு, "எடப்பாடியின் கூடாரத்தை கலைக்க ஓபிஎஸ்ஸால் முடியவில்லை... அதனால், நீங்கள் முழுவீச்சில் இறங்குங்கள்; நாங்கள் துணையாக இருக்கிறோம்" என்று தினகரனிடம் மாநில பாஜக தரப்பு பேசியதாம்.. இதைக்கேட்டு தெம்பான டிடிவியும், விரைவில் தென் மாவட்டங்களுக்கு விசிட் அடிக்க போவதாகவும், அப்போது நடத்தப்படும் மிகப்பெரிய கூட்டத்தில், எடப்பாடி டீமை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் அதிமுகவினரை ஆயிரக்கணக்கில் அமமுகவில் இணைத்து ஷாக் தரப்போவதாகவும் செய்திகள் வலம்வந்தன.
இதன்காரணமாகவும், மதுரையை தேர்ந்தெடுத்து மாநாட்டை அறிவித்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.. ஆக மொத்தம் பல்வேறு அரசியல் கணக்குகளை வைத்து, இந்த மாநாட்டை எடப்பாடி அறிவித்துள்ளதால், இதை எப்படி ஓபிஎஸ் + டிடிவி தினகரன் தரப்பு எதிர்கொள்ள போகிறது? தங்கள் வாக்குகளை எப்படி தக்க வைக்க போகிறது? பாஜக இவர்களை எப்படி சமாளிக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications