சென்னையில் வாடகை வீட்டில் குடியிருக்கீங்களா.. மாதம் 10 ஆயிரம் சேமிக்க எளிய வழி
சென்னை: சென்னையில் வாடகை வீட்டில் குடியிருக்கிறீர்கள் என்றால் உங்கள் பணத்தை சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அனுபவத்தின் அடிப்படையில் சில தகவல்களை உங்களுக்கு சொல்கிறேன் பாருங்கள். அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த கட்டுரையை எழுதி உள்ளேன். இதில் கொஞ்சம் ரிஸ்க் உள்ளது. இதன்படி செயல்படுவது என்பது உங்களது விருப்பத்தை பொறுத்தது.
சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், குறிப்பாக மாதம் 10 ஆயிரம் என்கிற அளவில் வாடகைக்கு குடியிருக்கிறீர்கள் என்றால்,கொஞ்சம் காசை கூட கொடுத்து ஒத்திக்கு வீடுபாருங்கள். ஒத்திக்கு வீடு பார்த்தால் 10 ஆயிரம் ரூபாய் அப்படியே உங்களுக்கு மிச்சமாகும்.

ஒருவேளை உங்களிடம் அதற்கு பணம் இல்லை என்றால், எந்த காரணம் கொண்டும் பர்சனல் லோன் வாங்காதீர்கள். நகைகளை அடகுவைத்து பணத்தை புரட்டுங்கள். அதை வைத்து ஒத்திக்கு குடி சென்றால், உங்களுக்கு நிச்சயம் பணம் கணிசமாக மிச்சமாகும். நகைகள் இல்லாத பட்சத்தில் பர்சனல் லோன் எடுக்கலாம். ஆனால் வருமானம் நிலையாக வரும் என்றால் இந்த முயற்சியில் இறங்குங்கள். இல்லாவிட்டால் நிச்சயம் வேண்டாம்.
பர்சனல் லோன் வட்டி என்றால் 5 லட்சம் 3 வருடத்திற்கு எடுக்கிறீர்கள் என்றால் மாதம் இஎம்ஐ சுமார் 16000 என்கிற அளவில் இருக்கும். வட்டியாக 85 ஆயிரம் முதல் 90 ஆயிரம் என்ற அளவிற்கு செலுத்தும் வாய்ப்பு உள்ளது. நிச்சயம் உங்களுக்கு லீசுக்கு போனால் லாபம் தான். நகை வட்டி என்றால் இதில் பாதி கூட இருக்காது. எனவே அது உங்கள் விருப்பம். எப்போதுமே பர்சனல் லோன் எடுக்கும் போது குறைவான இஎம்ஐ எதுவோ அதையே செலக்ட் செய்யுங்கள். அதிக இஎம்ஐ ஆப்சனை தேர்வு செய்ய வேண்டாம்.
அடுத்ததாக ஒத்தி அதாவது லீசுக்கு போகும் போது, சில விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அங்குள்ள பிரச்சனைகள் என்னென்ன, அவர் பணத்தை திரும்ப கொடுப்பாரா, உங்களிடம்பணம் வாங்கும் நபர் அந்த கட்டிடத்தின் உரிமையாளரா என்பதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். வீட்டில் தண்ணீர் பிரச்சனை உள்ளதா, வீட்டில் சுவர், டைல்ஸ், கழிவுநீர் குழாய் என ஏதேனும் பிரச்சனை வந்தால் யார் பொறுப்பேற்பது என்பதை தெளிவாக பேசி எழுத்துப்பூர்வமாக பத்திரத்தில் ஒப்புதல் பெற்றுக்கொள்ளுங்கள்.
எப்படி என்றால் ஒத்திக்கு போகும் போது அவரிடம் எல்லாவற்றையும் எழுதி அதனை பத்திர அலுவலகத்தில் பதிவு செய்ய சம்மதமா என்பதை அவரிடம் கேட்டுவிட்டு அட்வான்ஸ் கொடுங்கள். அல்லது ஒத்தி பத்திரத்தை https://www.tenancy.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். இதற்கு வீட்டின் உரிமையாளர் ஆதார் எண் மற்றும் அவரை பற்றிய விவரங்கள், உங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதை செய்துவிட்டால் சட்ட ரீதியாக நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும்.
பணத்தை எப்போதுமே வங்கி கணக்கில் மட்டுமே செலுத்துங்கள். ரொக்கமாக கொடுக்காதீர்கள். இதை எல்லாம் சரியாக செய்தால், வாடகை வீட்டில் இருந்து ஒத்திக்கு போவதன் மூலம் நிச்சயம் மாதம் 10 ஆயிரம் சேமிக்க முடியும். அதை பிக்சிட் டெபாசிட் ஆக சேமித்து வந்தால் வந்தால் இரண்டு வருடமோ அல்லது ஒரு வருடமோ உங்களுக்கு நிச்சயம் நல்ல தொகை சேமிப்பாக இருக்கும்.
இது கொஞ்சம் ரிஸ்க்தான் என்றாலும், சரியான வீட்டிற்கு லீசுக்கு சென்றால் உங்களுக்கு பணம் லாபகரமாக இருக்கும். மாறாக கடன் வாங்கி திவால் நிலையில் உள்ளவரின் வீட்டிற்கு லீசுக்கு சென்றால் சிக்கல் தான். எனவே லீசுக்கு போகும் முன்பு அவரை பற்றி முழுமையாக அறிந்துவிட்டு செல்லுங்கள். லீசு ஒப்பந்தத்தை அரசு இணையத்தில் பதிவு செய்து சட்ட ரீதியான பாதுகாப்புடன் செல்லுங்கள்.












Click it and Unblock the Notifications