ஆம்ஸ்ட்ராங் கொலை.. பார் கவுன்சிலை நெருங்கிய போலீஸ்.. ராஜ்குமாரை அழைத்தது ஏன்?
சென்னை: கடந்த 2014 முதல் சென்னை உயர்நீதிமன்ற பார் கவுன்சில் சங்கத்தின் செயலாளராக இருந்து வந்த வழக்கறிஞர் ராஜ்குமாரை ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாகப் புலன் விசாரணை செய்து வரும் அதிகாரிகள் அழைத்து சில விளக்கங்களைக் கேட்டுள்ளனர்.
பிஎஸ்பியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் அருகிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 11 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களைச் சிறையிலடைத்தனர். அதன் பின்னர் குற்றத்திற்கு தொடர்புடைய இவர்களைச் சிறைக்காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் ரவுடி திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தப் படுகொலை தொடர்பாக வழக்கறிஞர்கள் மலர்க்கொடி சேகர், ஹரிஹரன், சதீஷ் ஆகியோர் கைதானநிலையில் தலைமறைவாக இருந்துவந்த ஆற்காடு சுரேஷின் மனைவியும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலை சில நாட்கள் முன்னதாக போலீசார் ஓட்டேரியில் வைத்து கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரவுடி சம்போ செந்தில் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. ஆகவே சம்போ செந்தில் என்ற செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக விசயங்களின் சென்னை உயர்நீதிமன்ற பார் கவுன்சில் பெயர் அதிகம் அடிப்பட்டது. கவுன்சிலில் நடைபெற்ற தேர்தல் முன் பகை காரணமாகக் கூட இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற ஒரு சந்தேகம் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. பார் கவுன்சில் தொடர்பான சில வழக்கறிஞர்கள் கூட இதே கருத்தைத் தெரிவித்திருந்தனர். அதன் அதிரடி திருப்பமாக பிஎஸ்பியின் புதிய மாநிலத் தலைவர் ஆனந்த் கூட இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
அதனால் வழக்கறிஞர் பால் கனகராஜ் கடந்த மாதம் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக புலன் விசாரணை செய்துவரும் காவல்துறை அதிகாரிகள் முன்னாள் பார் கவுன்சில் செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமாரை அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன? அதற்கு ராஜ்குமார் அளித்த பதில்கள் என்ன?
அது தொடர்பாக ராஜ்குமார் அளித்துள்ள பேட்டியில்,"காவல்துறையை என்னை விசாரணைக்காக அழைத்தார்கள். ஏன் என்னை விசாரிக்க வேண்டும் என விளக்கம் கேட்டேன். சில கேள்விகள் இருப்பதாகவும் அதற்கு உரிய விளக்கம் தேவைப்படுகிறது என்றும் சொன்னார்கள். ஆகவே நான் போய் இருந்தேன். கடந்த 2014இல் இருந்தே பார் கவுன்சிலில் செயலாளராக பணியாற்றி வருகிறேன். இந்த ஆண்டுதான் என் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறேன்.

நான் பதவியிலிருந்த காலகட்டத்தில் கவுன்சில் செயல்பாடு எப்படி இருந்து? வழக்கறிஞர்களிடம் இருந்து புகார் வந்தால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் விவரங்கள் தெரியுமா? எனப் பல கேள்விகளைக் கேட்டார்கள். நான் எனக்குத் தெரிந்த விவரங்களை விசாரணை அதிகாரிகளிடம் அளித்தேன்.
பார் கவுன்சில் தொடர்பாகப் பல ஊகங்களைப் பலர் வெளியே பேசி வருகிறார்கள். அதனடிப்படையில் தான் என்னிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு உரிய விளக்கத்தை நான் அளித்தேன். பல கேள்விகள் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாகவே இருந்தன. அதற்கு உரியத் தகவல் எந்தளவுக்கு என்னிடம் இருந்ததோ அதை முழுமையாக ஒளிவு மறைவு இல்லாமல் எடுத்துச் சொன்னேன். எனது ஒத்துழைப்பு சிறப்பாக இருந்ததாக அதிகாரிகள் சொன்னார்கள். மீண்டு ஏதேனும் தேவை எனில் விசாரணைக்கு வரும்படி கேட்டுக் கொண்டார்கள். நான் முழு ஒத்துழைப்பை அளிப்பதாகச் சொல்லி இருக்கிறேன்.
என்னிடம் நடத்தப்பட்ட மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை பற்றிய புலன் விசாரணை மிக நேர்மையான முறையில் சென்று கொண்டுள்ளது என்பதையும் உணர்ந்து கொண்டேன். என்னிடம் என்ன கேட்டார்கள், விசாரணையில் நான் சொன்ன விளக்கங்கள் என்ன? ஆகிய விவரங்களை நான் வழக்கு முடியும் வரை வெளியிட முடியாது. அது புலன் விசாரணையைப் பாதிக்கக்கூடும். எனவே அதைச் சொல்லாமல் தவிர்க்கிறேன்" என்கிறார்.












Click it and Unblock the Notifications