சென்னை லாட்ஜ்ஜில்.. டக் டக்னு நுழைந்த போலீஸ்.. யாரது? இங்கே என்ன வேலை? சாட்டையை சுழட்டும் காக்கிகள்
சென்னை: வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் ராணுவ அணிவகுப்பு நடக்கிறது. இதையடுத்து தேர்தல் பாதுகாப்ப பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நாளை 18ம் தேதி ஒரேகட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

வாக்குச்சாவடி: தோ்தல் பாதுகாப்பு பணியில் தமிழக காவல் துறையைச் சோ்ந்த 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபடுகின்றனா்... பதற்றம், மிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினா் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனா். இதற்காக 190 கம்பெனி துணை ராணுவ படையினா் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டு, மாவட்ட வாரியாகப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனா்.
இவா்களுடன் ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், ஓய்வு பெற்ற காவல் துறையினா், ஊா்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள்.. இதைத்தவிர, நாளைய தினம் கூடுதலாக காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இதற்காக அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமாா் 10,000 போலீஸாா் தமிழகம் வந்துள்ளனர். இவா்கள் அனைவரும் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட உள்ளனர்.
காவல்துறை: தமிழக காவல் துறை, துணை ராணுவத்தினா், பிற மாநில காவல் துறை, ஓய்வு பெற்ற ராணுவத்தினா், ஓய்வு பெற்ற காவலா்கள், ஊா்காவல் படையினா் உள்பட மொத்தம் 1.90 லட்சம் போ் ஈடுபட போவதாகவும் தெரிகிறது.
அதுமட்டுமல்ல, எப்போதுமே பொதுமக்கள் பயமின்றி வாக்கு செலுத்த வர வேண்டும் என்பதற்காக போலீஸ் அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம்.. அந்தவகையில், சென்னையில் பதட்டமான, மிக பதட்டமான வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதியில் மக்கள் வாக்களிக்க முன்வர வேண்டும் என்பதற்காக போலீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
வாக்கு சதவீதம்: முக்கிய வீதிகள், தெருக்களில் துணை ராணுவப் படையினர் அணி வகுத்து செல்கிறார்கள்... 190 துணை ராணுவப் படையினர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டிருக்கிறார்கள்.. அவர்கள் துப்பாக்கியுடன் நகரின் பதட்டமான பகுதிகளில் அணிவகுப்பு நடந்து வருகின்றன.
அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் அணிவகுப்பு நடக்கிறது.
அணிவகுப்பு: இதை தவிர சென்னையில் பாரிமுனை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், ஆயிரம்விளக்கு, பெரிய மேடு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தங்கும் ரிசார்ட்கள், லாட்ஜுகளில் வெளி மாவட்ட நபர்கள் தங்கியிருப்பவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். ஒருவேளை அரசியல் பிரமுகர்கள் தங்கி இருந்தால் அவர்கள், உடனடியாக வெளியேற வேண்டும் என்று லாட்ஜ் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம்..
கணக்கெடுப்பு: அதேபோல, வெளியூர்களிலிருந்து தொழில் ரீதியாக தங்குபவர்களும் இருக்கக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் அதற்கான ஆவணங்களை கொடுக்க வேண்டும். வெளி மாநிலங்களை சார்ந்தவர்கள் யார்-யார் தங்கி உள்ளனர்? சந்தேகப்படும்படி யாரேனும் தங்கி இருக்கிறார்களா? என்று போலீசார் தங்கள் பகுதியில் உள்ள லாட்ஜ்கள், ரிசார்ட்களில் கணக்கெடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications