மும்பை, அகமதாபாத்தில் 1,000 படுக்கைகளுடன் அதி நவீன மருத்துவமனை.. அதானி குழுமம் அறிவிப்பு
மும்பை: இந்தியாவின் சுகாதாரத் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அதானி குழுமம் 1,000 படுக்கைகள் கொண்ட அதிநவீன 'அதானி ஹெல்த் சிட்டி' திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி மும்பை, அகமதாபாத்தில் 1,000 படுக்கைகளுடன் அதி நவீன மருத்துவமனைகள் அமைய உள்ளது. மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த திட்டம் உருவாக உள்ளது.
அதானி குழுமம் தற்போது மருத்துவத் துறையில் மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, "அதானி ஹெல்த் சிட்டி" (Adani Health City) என்ற பெயரில் 1,000 படுக்கைகள் கொண்ட நவீன பல்துறை மருத்துவமனை வளாகங்கள் உருவாக்கப்பட உள்ளன.

தரமான மருத்துவ சேவைகள் அனைவருக்கும்
இந்த திட்டம் அகமதாபாத் மற்றும் மும்பையில் முதற்கட்டமாக அமைக்கப்பட உள்ளது. இது வெறும் மருத்துவமனை மட்டுமல்ல. ஒரே வளாகத்தில் மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி மையம், சிகிச்சைக்கு பிறகு நோயாளிகள் மீண்டு வர உதவும் சிறப்பு பராமரிப்பு மையங்கள் உள்ளிட்ட அனைத்தும் இடம்பெற உள்ளன. அதாவது சிகிச்சை, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் வெளியிட்டார். இந்தியாவில் தரமான மருத்துவ சேவைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், அதானி அறக்கட்டளை கடந்த 30 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவரை 22 மாநிலங்களில் உள்ள 7,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பயன் அடைந்ததாகவும் அவர் கூறினார். டாக்டர் ப்ரீத்தி அதானியின் தலைமையில் இந்த சமூகப் பணிகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
1.25 லட்சம் இளைஞர்கள் பயன்
மருத்துவ சேவையோடு மட்டுமல்லாமல், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிலும் அதானி குழுமம் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக பீகாரில் கிராமப்புற மக்களுக்கு குறைந்த செலவில் கண் சிகிச்சை வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மருத்துவக் கல்வியை வலுப்படுத்தும் வகையில் பல கல்வி நிறுவனங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில், அதானி அறக்கட்டளை கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. இதுவரை 1.25 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் இந்த பயிற்சி திட்டங்கள் மூலம் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் கட்ச் பகுதியில் தொழிற்பயிற்சி நிலையங்களை (ITI) தத்தெடுத்து நடத்தும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, திறமையான தொழிலாளர்கள் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்வதும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் பார்க்கும்போது, மருத்துவமனை கட்டுவது மட்டுமல்லாமல், மருத்துவம், கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் சமூக நலன் ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் முன்னேற்றும் நீண்டகால திட்டமாகவே "அதானி ஹெல்த் சிட்டி" பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் சுகாதார மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications