"முதலமைச்சர் எனும் பொறுப்புக்கு உகந்தது அல்ல".. விஜய் பேச்சுக்கு திருமாவளவன் கடும் எதிர்ப்பு!
சென்னை: "முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது முதலமைச்சர் என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல. கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும்" என முதல்வர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சைகையை சட்டப்பேரவைக்குள் முதல்வர் விஜய் ஏளனம் செய்யும் வகையில் நடித்துக் காட்டியதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

அப்பாவ காணோம்
மேலும், குட்டிக்கதை ஒன்றையும் கூறினார் விஜய். ஒரு ஊரில் ஒரு பெரியவர் வெயில் அதிகமாக இருப்பதாகச் சொல்லி, கண்ணுக்கு மேலே கை வைத்துக்கொண்டு எதையோ தேடிக்கொண்டிருந்தாராம். அப்போது அருகில் இருந்த சிறுவன் என்ன தேடுகிறீர்கள் என்று கேட்க, அதற்கு அந்தப் பெரியவர், "உன் அப்பா இங்கேயேதான் இருப்பார் என்று சொன்னார்கள், அதான் தேடிக்கொண்டிருக்கிறேன்" என்றாராம் என கிண்டல் செய்யும் வகையில் பேசினார் விஜய்.
இதன் தொடர்ச்சியாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், முதல்வர் விஜய்யின் இந்தச் செயலுக்கு தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
முதலமைச்சர் பொறுப்புக்கு அழகல்ல - திருமாவளவன் சாடல்
சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன், "முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது, முதலமைச்சர் என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல" என்று நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அரசியல் பொதுமேடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நாகரிகத்தைக் குறிப்பிட்ட அவர், "கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய இத்தகைய கிண்டல் மற்றும் ஏளனப் பேச்சுக்களை, ஜனநாயகத்தின் உயரிய இடமாகக் கருதப்படும் சட்டப்பேரவையில் பேசுவதையாவது முதல்வர் விஜய் தவிர்த்திருக்க வேண்டும்" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் என்ன நடந்தது?
சட்டப்பேரவை விவாதத்தின்போது, தேர்தல் கூட்டணிகள் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய முதல்வர் விஜய், எதிர்க்கட்சி வரிசையில் திமுகவினர் வெளிநடப்பு செய்திருந்தபோது ஒரு குறிப்பிட்ட அரசியல் சைகையைச் செய்து காட்டினார். கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடிந்த பிறகு மு.க.ஸ்டாலின் செய்த 'Finished' என்ற விடியோ சைகை, இணையத்தில் வைரலாகி இருந்தது. அதனைப் பேரவையில் சபாநாயகரிடம் அனுமதி கேட்டு முதல்வர் விஜய் நடித்துக் காட்டியது, சலசலப்பை ஏற்படுத்தியது.
மு.க.ஸ்டாலின் எதிர்வினை
இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், "சட்டப்பேரவை நேரலை கேமராவை ஏதோ சினிமா படப்பிடிப்பு கேமரா போல நினைத்து, முதல்வர் விஜய் 'பஞ்ச் டயலாக்' பேசி நடித்துள்ளார்" என விமர்சித்திருந்தார்.
மேலும், "திரைப்பட நடிகர் என்ற பிம்பத்தை விடுத்து, இனிமேலாவது ஒரு முதலமைச்சருக்குரிய பொறுப்புடன் விஜய் நடந்துகொள்ள வேண்டும்" என்றும் வலியுறுத்தியிருந்தார்.
வலுக்கும் அரசியல் விவாதங்கள்
தமிழக அரசியல் களம் புதிய கூட்டணி மாற்றங்களைச் சந்தித்து வரும் வேளையில், தவெக அரசுக்கு ஆதரவளிப்பது குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இத்தகையச் சூழலில், திருமாவளவனின் இந்தத் திடீர் கண்டனம், தவெக மற்றும் விசிக இடையேயான அரசியல் உறவிலும், திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்விலும் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications