பெரிய முறைகேடு! தமிழ்நாட்டில் மறுதேர்தல் நடத்துங்க! தேர்தல் ஆணையரை கைது செய்யணும்! - தாக்கரே ஷாக்
சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 10 மாதங்களில் 14 முறை ஆட்சேபனைக் கடிதங்கள் எழுதியதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் வெளியிட்ட புலனாய்வு அறிக்கை, இந்திய அளவில் பெரும் அரசியல் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை முன்வைத்து, சிவசேனா (UBT) கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களை ரத்து செய்துவிட்டு, வாக்குச்சீட்டு முறையில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.
"அம்பலமானது உண்மை": இரு ஆணையர்களுக்கு உத்தவ் நன்றி
மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த உத்தவ் தாக்கரே, "எதிர்க்கட்சிகள் கடந்த சில மாதங்களாகத் தேர்தல் ஆணையத்தின் மீது முன்வைத்த புகார்கள் வெறும் கற்பனை அல்ல என்பதை இந்த புலனாய்வு அறிக்கை அப்பட்டமாக நிரூபித்துள்ளது" என்றார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் தன்னிச்சையான செயல்பாடுகளை ஆவணப்பூர்வமாகத் தைரியத்துடன் பதிவு செய்த தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆணையத்தின் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி, மற்ற இரண்டு ஆணையர்களுக்கே தெரியாமல் வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்குவது, மென்பொருளை மாற்றுவது போன்ற விவகாரங்கள் ஞானேஷ் குமாரின் கட்டுப்பாட்டில் தன்னிச்சையாக நடந்துள்ளதாக உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டினார்.
3 மாநிலங்களில் மறுதேர்தல் கோரிக்கை: என்ன காரணம்?
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியின் (SIR) போது கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் அநியாயமாக நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட உத்தவ் தாக்கரே, இதனால் தேர்தல் முடிவுகளின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகிவிட்டது என்றார்.
1. தமிழ்நாடு & மேற்கு வங்கம்: தமிழ்நாட்டில் இந்தத் திருத்தப் பணியின் போது சுமார் 70 லட்சம் பெயர்களும், மேற்கு வங்கத்தில் பல லட்சம் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
2. மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் திடீரென புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதும், பின்னர் வரைவுப் பட்டியலில் லட்சக்கணக்கானோர் நீக்கப்பட்டதும் முறைகேடுகளுக்கு வழிவகுத்தது என்றார்.
3. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழந்துவிட்டனர்; எனவே, இந்த மூன்று மாநிலங்களிலும் தேர்தலை உடனடியாக மீண்டும் நடத்த வேண்டும், அதுவும் பழைய வாக்குச்சீட்டு முறையிலேயே நடத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.
"இது ஜனநாயகத்தைக் காப்பாற்றும் போராட்டம்"
"இது ஏதோ சிவசேனா அல்லது குறிப்பிட்ட ஒரு கட்சியின் விவகாரம் அல்ல.. இது நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம்" என்று தெரிவித்த உத்தவ் தாக்கரே, அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் ஓரணியில் திரள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
தகுதி வாய்ந்த உண்மையான வாக்காளர்களைப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, சிலரது உத்தரவுகளுக்கு ஏற்பச் செயல்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என அவர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் உள் விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், உத்தவ் தாக்கரேவின் இந்தக் கடுமையான கோரிக்கை அரசியல் களத்தில் மிகப்பெரிய அனலைக் கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications
