அழுக்கை கும்பிடணுமா? - முத்தரசன் சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த பாஜக.. ‘அரெஸ்ட் பண்ணுங்க’ - போர்க்கொடி!
சென்னை : விநாயகரை இழிவுபடுத்தி பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
திமுக அரசு மதசார்பற்றது என்பது உண்மையென்றால், தாமதிக்காமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசனை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என நாராயணன் திருப்பதி கேட்டுக்கொண்டுள்ளார்.
சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை விமர்சித்திருந்தார்.
முத்தரசனின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி சர்ச்சை
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கவில்லை. . தமிழக முதலமைச்சர் என்ற முறையில் முக ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் நெருக்கடி கொடுத்து வந்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் அதற்கு செவிசாய்க்கவில்லை.

முத்தரசன் பேச்சு
இந்தநிலையில் திமுக சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "கணேசனின் தாயாரான பார்வதியம்மாள் பல மாதங்களாக, பல வருடங்களாக குளிக்கவில்லை. ஒருநாள் கங்கைக்கு குளிக்கப் போயிருக்கிறார். குளிக்கும்போது ஏராளமான அழுக்கு வந்திருக்கிறது. அந்த அழுக்கை திரட்டி ஒரு பொம்மை செய்திருக்கிறார். அதுதான் விநாயகராகி விட்டது.

அழுக்கு
அந்த அழுக்கை தண்ணீரில் கரைத்து விட்டிருக்கிறார். இப்படித்தான் வரலாற்றில் கூறிகிறது. அந்த அழுக்கைப் போய் நாங்கள் ஏன் கும்பிட வேண்டும்? அந்த அழுக்குக்கு எதற்காக நாங்கள் வாழ்த்துச் சொல்ல வேண்டும்? விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது" எனப் பேசியிருந்தார். இந்தப் பேச்சு, பாஜகவினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கொந்தளிப்பு
இதற்கு தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விநாயகரை இழிவுபடுத்தி பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனை கைது செய்ய வேண்டும் என தமிழக முதல்வரை வலியுறுத்தியுள்ளார்.

மதச்சார்பற்ற அரசு என்பது உண்மையா
மேலும், "மத துவேஷங்களை செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதாக சொன்ன தமிழக முதலமைச்சர், திராவிட முன்னேற்ற கழக அரசு மதச்சார்பற்றது என்பது உண்மை என்றால், தாமதிக்காமல் தலைவர் என்ற போர்வையில் இருக்கும் வாய்க்கொழுப்பெடுத்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் என்ற சமூக விரோதியை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய உத்தரவிட வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications