அப்பல்லோவில் ஜெயலலிதாவின் கால்கள் துண்டிக்கப்பட்டிருந்ததா?.. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை விளக்கம்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெல்ல மெல்ல ஆளை கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக கடந்த 2016 ஆம் ஆண்டு சொல்லப்பட்டது. அவருக்கு முகத்தில் சிறிய ஓட்டைகள் இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அது எம்பாம்பிங் செய்ததால் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
இதையடுத்து ஜெயலலிதாவின் உடலை பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த போது கால்கள் துண்டிக்கப்பட்டது போல் உயரம் குறைந்த நிலையில் அவரது உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது.

மருத்துவர்கள்
ஆனால் இதையும் மருத்துவர்கள் மறுத்தனர். ஜெயலலிதாவுக்கு விஷம் கொடுத்துவிட்டார்கள் என்றெல்லாம் உறுதிப்படுத்தப்படாத வதந்திகள் ரெக்கை கட்டி பறந்தன. சமூகவலைதளங்களிலும் இது வேகமாக பரவியதால் மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.

158 பேரிடம் ஆணையம் விசாரணை
சுமார் 5 ஆண்டுகளாக 158 பேரிடம் இந்த ஆணையம் விசாரணை நடத்தியது. இதன் விசாரணை அறிக்கையை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி சமர்ப்பித்தார். இதையடுத்து இந்த அறிக்கை நேற்றைய தினம் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

சரியான சிகிச்சை
இதில் ஜெயலலிதாவுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் அவருக்கு சரியான சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வதை சசிகலா தடுத்தார் என்றும் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், டாக்டர் சிவகுமார், சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் உள்பட 4 பேர் குற்றம்புரிந்தவர்கள் என்றும் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மெல்ல கொல்லும் விஷம்
அது போல் மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதாவின் கால்கள் துண்டிக்கப்படவில்லை. அவரை போயஸ் தோட்டத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன்னர் மெல்ல கொல்லும் விஷம் கொடுத்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை. 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவுக்கு பல மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. பல மருத்துவர்கள் சோதனை செய்தனர். ஆனால் மருத்துவ பரிசோதனைகளோ மருத்துவர்களோ அவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்ததாக கண்டறியவில்லை.

பொன்னையன் குற்றச்சாட்டு வதந்தி
அவரது ரத்த பரிசோதனைகளில் கூட விஷம் இருந்ததற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை. எனவே அவருக்கு விஷம் கொடுத்திருக்கலாம் என மனோஜ் பாண்டியனும் ஓபிஎஸ் தரப்பும் கூறியிருந்தது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அது போல் ஜெயலலிதாவின் தலையில் யாரோ கட்டையால் ஓங்கி அடித்ததால்தான் அவர் மயங்கினார் என முன்னாள் அமைச்சர் சி பொன்னையன் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து ஆணையம் அவரிடம் விசாரணை நடத்தியதில் இது வதந்தி என்பதை பொன்னையன் ஒப்புக் கொண்டார். இவ்வாறு ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications