Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியத் திரையிசையின் 'மின்னல் குரல்' ஆஷா போஸ்லே மறைந்த செய்தி கேட்டு, நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. தனது தேன் போன்ற குரலால் தமிழர்களின் இதயங்களிலும் குடியேறியவர் ஆஷா போஸ்லே. தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத ஒருவரால் இவ்வளவு அழகாகத் தமிழை உச்சரிக்க முடியுமா என்று பலரும் ஆச்சரியப்படும் அளவுக்கு இவரது பாடல்கள் அமைந்துள்ளது.

மகாராஷ்டிராவின் சாங்லியில் பிறந்த ஆஷா, தனது 10 வயதிலேயே பாடத் தொடங்கினார். இசை மேதை தீனநாத் மங்கேஷ்கரின் மகளாகவும், லதா மங்கேஷ்கரின் சகோதரியாகவும் அறிமுகமானாலும், தனது தனித்துவமான 'மாடர்ன்' ஸ்டைலால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஆஷா போஸ்லே. கின்னஸ் சாதனை முதல் தாதாசாகேப் பால்கே விருது வரை பல உச்சங்களைத் தொட்டவர்.

Konja Neram

தமிழ் பாடல்கள்

தமிழ் இசையில் சில பாடல்களை மட்டுமே பாடினாலும் அவரது நளினம் அசாத்தியமானது. குறிப்பாக இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய இரு துருவங்களின் இசையிலும் ஆஷா போஸ்லே பாடியுள்ளார். தமிழில் அவர் பாடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த டாப் 5 பாடல்கள் குறித்து நாம் பார்க்கலாம்!

இளையராஜா & ஏ.ஆர்.ரஹ்மான்

"நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி.." கமல் நடிப்பில் 2000-ம் ஆண்டில் வெளியான ஹே ராம் படத்தில் இடம் பெற்ற அட்டகாசமான காதல் பாடல் இது.. ஹே ராம் படத்தைப் பார்க்காதவர்கள் கூட நிச்சயம் இந்த பாடலை கேட்டு இருப்பார்கள். இசைஞானி இளையராஜா இசையில் ஹரிஹரனுடன் இணைந்து ஆஷா இந்த பாடலை பாடிய விதம் அசாத்தியமானது. ஒரு கலக்கலான காதலைத் தனது குரலால் அப்படியே கண்முன் நிறுத்தினார் ஆஷா.

"செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.." என்ற அலைபாயுதே பாடல்.. நீ பார்த்த பார்வை பாடலுக்கும் இதற்கும் தொடர்பே இருக்காது. ஆனால், இந்த பாடலை கேட்டாலும் உங்களை நீங்களே மறந்துவிடுவீர்கள். இப்படி தான் காதல் பாடலாக இருந்தாலும் சரி, துள்ளிசையாக இருந்தாலும் சரி ஆஷா போஸ்லே தனித்துவம் காட்டியிருப்பார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் துள்ளலான இந்தப் பாடலில் ஷங்கர் மகாதேவனுடன் இணைந்து ஆஷா போஸ்லே பாடியபோது, அவரது குரலில் இருந்த அந்த இளமைத் துடிப்பு ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது.

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்

சந்திரமுகி படத்திற்காக வித்யாசாகர் இசையில், முதிர்ச்சியான அதேசமயம் மிக மென்மையான குரலில் ஆஷா பாடியது தான் "கொஞ்ச நேரம்.. கொஞ்ச நேரம்" பாடல், இன்றும் காதலர்களின் 'ஆல் டைம் ஃபேவரைட்' பாடல்களில் ஒன்று இது. இந்த பாடலை பாடியபோது அவர் 70 வயதைக் கடந்திருந்தார்.. இருந்தாலும் ஒரு பதின்பருவப் பெண்ணின் துள்ளலோடு இந்தப் பாடலை அவர் பாடியிருந்தது ஆச்சரியம்!

இது ஆல் டைம் கிளாசிக்.. ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் வரும் செண்பகமே செண்பகமே பாடலை இசைஞானி இளையராஜாவின் இசையில், கிராமிய ஸ்டைலில் ஆஷா பாடியிருப்பார்.. இந்தப் பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத ஒருவரால் எப்படி இவ்வளவு சுத்த தமிழில் ஒரு பாடலை அட்டகாசமாகப் பாட முடிந்தது என்பது இன்னுமே ஒரு மில்லியன் டாலர் கேள்வி தான்.

இது அண்டர் ரேட்டட் பாடல் என்றே சொல்லலாம்.. விக்ரம் நடிப்பில் உருவான மீரா படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் ஓ பட்டர் ப்ளை பாடலை பாடியிருப்பார்.. இளையராஜாவின் மாயாஜால இசைக்கு உயிர் கொடுத்திருந்தார் ஆஷா போஸ்லே.. 1992-ல் வெளியான இந்த பாடலில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து ஆஷா பாடிய இந்தப் பாடல் இப்போது காலம் கடந்தும் நிற்கிறது.. மெல்லிய குரலில் அவர் காட்டிய அந்த நளினம் பாடலுக்கு உயிரூட்டியது.

தமிழ் உச்சரிப்பு

தமிழில் பாடிய பல வட இந்தியப் பாடகிகள் உச்சரிப்பில் தடுமாறியபோது, ஆஷா மட்டும் ஒவ்வொரு வார்த்தையையும் அதன் உணர்ச்சி குறையாமல் பாடினார். "இளையராஜா ஒரு கண்டிப்பான வாத்தியார், அவரிடம் பாடும்போது தமிழ் தானாக வந்துவிடும்" என்று அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டது நினைவு கூரத்தக்கது. 'செண்பகமே' என்று அவர் அழைத்தபோதும் சரி, 'கொஞ்ச நேரம்' என்று அவர் கெஞ்சியபோதும் சரி... தமிழ் இசை ரசிகர்கள் ஒருபோதும் ஆஷாவை அந்நியப் பாடகியாகப் பார்த்ததில்லை. நம் வீட்டுப் பெண்ணாகவே அவர் குரல் இன்றும் காற்றில் கலந்திருக்கிறது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+