இதுதான் ஒரே வழியாம்.. மொத்தமாக மீட்க திட்டம்.. சேகர் பாபுவிற்கு "சிறப்பு" அசைன்மென்ட் தந்த ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிற்கு முக்கியமான அசைன்மென்ட் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
Recommended Video
தமிழ்நாட்டில் கொரோனா லாக்டவுன் காரணமாக பொருளாதாரம் பெரிய அளவில் சரிந்துள்ளது. ஒரு பக்கம் முன்னாள் அரசின் பொருளாதார கொள்கைகள் காரணமாக அரசு பெரிய அளவில் இழப்புகளை சந்தித்தது. இன்னொரு பக்கம் லாக்டவுன் காரணமாக அரசின் வருமானம் அதள பாதாளத்திற்கு சென்றது.
இதனால் புதிதாக பதவி ஏற்று இருக்கும் திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது. அரசுக்கான வருமானத்தை எப்படியாவது பெருக்க வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளது.

சுற்றுலாத்துறை
தமிழ்நாட்டின் வருமானத்தை சுற்றுலாத்துறை மூலம் பெருக்க வேண்டும் என்ற திட்டத்தில் அரசு இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. உள்நாட்டு சுற்றுலாவில் தமிழ்நாடு மீண்டும் முதலிடம் பிடிக்கும் திட்டத்தில் இருப்பதாகவும், சுற்றுலா மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் திட்டம் இருப்பதாகவும் நிறைய செய்திகள் வெளியாகின. இந்த நிலையில்தான் தமிழ்நாடு கோவில்களை அரசு குறி வைத்துள்ளது.

கோவில்
தமிழ்நாடு கோவில் வருமானம் மூலம் பொருளாதாரத்தை பெரிய அளவில் மீட்டு எடுக்கும் திட்டத்தில் அரசு இருப்பதாக தெரிகிறது. தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிரசித்தி பெற்ற கோவில்கள் பல உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய கோவில்கள், அழகிய குளம் கொண்ட கோவில்கள், வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள், எழில் கொஞ்சும் மழை கோவில்கள் என்று அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பல நூறு கோவில்கள் உள்ளன.

பராமரிப்பு
இந்த கோவில்களை மொத்தமாக புதுப்பித்து, மக்களை இங்கே அதிகம் வரவைக்கும் திட்டத்தில் அரசு உள்ளது. இதற்கான ஸ்பெஷல் அசைன்மென்ட் ஒன்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிற்கு முதல்வர் ஸ்டாலின் மூலம் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அதன்படி தற்போது அமைச்சர் சேகர் பாபு, தமிழ்நாடு முழுக்க உள்ள பெரிய கோவில்களை புதுப்பிக்கும் பணியில் இறங்கி உள்ளார்.

புதுப்பிப்பு
ஏற்கனவே பழனியில் இருப்பது போல மேலும் 6 மலை கோவில்களுக்கு ரோப் கார் அமைக்க போவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து இருந்தார். அதேபோல் திருச்செந்தூர் கோவிலை புதுப்பித்து, அதை திருப்பதி கோவிலுக்கு இணையாக மாற்றுவோம் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதற்கான பணிகளை அமைச்சர் நேரிலும் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

பணிகள்
இதுபோக இன்னொரு பக்கம் திருவண்ணாமலை கோவிலை புதுப்பிக்கும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. தமிழ்நாடு அரசின் திட்டத்தின்படி முக்கியமான பெரிய கோவில்களான மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில், பழனி முருகன் கோவில், திருச்செந்தூர், திருவண்ணாமலை, மருதமலை ஆகிய கோவில்களில் புதுப்பிப்பு பணிகளை செய்து, மேலும் பல வசதிகளை ஏற்படுத்த உள்ளனர்.

வருமானம்
வரும் நாட்களில் கோவில்கள் மூலம் வருமானத்தை அதிகரிப்பதும், கோவில் நிலங்கள், சொத்துக்கள் மூலம் வருமானத்தை உயர்த்தவும் அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு பொருளாதாரத்தை வளர்க்க குறைந்த வழிகளே உள்ளன. அதில் கோவில் மூலமான வருமான பெரிய அளவில் உதவும் என்கிறார்கள். நிதி நிலையை அதிகரிப்பதில் கோவில் வருமானம் முக்கிய பங்கு வகிக்க போவதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications