அடல் பென்ஷன் உயர்கிறதா? ரூ.10000 APY ஓய்வூதியம் திட்டத்தில் பெரிய மாற்றம்.. மத்திய அரசு சொல்வது என்ன
சென்னை: மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் முக்கியமானது அடல் பென்ஷன் யோஜனா திட்டமாகும்.. இந்த திட்டத்தில் சேரும் மக்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் இந்தத் திட்டத்தை அதிகமாக நாடுகிறார்கள்.. இந்த APY திட்டத்தில் பென்ஷன் உயர்த்தப்படுமா? என்ற கேள்வி வலம்வந்தவாறே இருந்தது.. இதற்கு தற்போது மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலம், 60 வயதை கடந்த பிறகு மாதந்தோறும் உறுதியான ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.5,000 வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இந்த ஓய்வூதியம் வாழ்நாள் முழுவதும் தொடரும் என்பதால், முதுமைக் காலத்தில் வருமானம் பற்றிய கவலை இல்லாமல் வாழ முடியும்.

ஆனால், இந்த திட்டத்தில் சேர 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்திய குடிமக்களாக இருப்பது கட்டாயம். மேலும், விண்ணப்பிப்பவர்களிடம் சேமிப்பு வங்கிக் கணக்கு அல்லது தபால் நிலையக் கணக்கு இருக்க வேண்டும். எனினும், 2022 ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் வருமான வரி செலுத்துபவர்கள் இந்தத் திட்டத்தில் புதிதாக சேர அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இளம் வயதில் சேரும்போது மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை குறைவாக இருக்கும். உதாரணமாக 18 வயதில் ரூ.5,000 ஓய்வூதியம் பெற விரும்பினால், மாதம் ரூ.210 மட்டும் செலுத்தினால் போதும். ஆனால் 40 வயதில் அதே ஓய்வூதியத்தை தேர்வு செய்தால், மாதம் ரூ.1,454 செலுத்த வேண்டியிருக்கும். அதனால் இளம் வயதிலேயே இந்தத் திட்டத்தில் சேர்வது அதிக லாபம் தரும்.
10000 ஓய்வூதியம்
கல்யாணமானவர்கள் இந்த திட்டத்தை குடும்ப நலனுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். கணவன் மற்றும் மனைவி இருவரும் தனித்தனியாக கணக்கு திறந்து ரூ.5,000 ஓய்வூதியத்தை தேர்வு செய்தால், 60 வயதுக்கு பிறகு அந்த குடும்பத்திற்கு மாதம் ரூ.10,000 மொத்த ஓய்வூதியம் கிடைக்கும்.
சுருக்கமாக சொல்லப்போனால் குறைந்த முதலீட்டில் எதிர்கால பாதுகாப்பை வழங்கும் இந்த அடல் பென்ஷன் யோஜனா, சாதாரண மக்களுக்கு நம்பிக்கையான திட்டமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது..
பென்ஷன் உயர்த்தப்படுமா
இந்நிலையில், அடல் ஓய்வூதியத் திட்டத்தில் (APY) ஓய்வூதியம் உயர்த்தப்படுமா என்ற சந்தேகம் வலுத்து வந்தது.. இதற்கு மத்திய அரசு விளக்கம் ஒன்றை தந்துள்ளது.. மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி நாடாளுமன்றத்தில் தெளிவாக கூறியிருக்கிறார்.
அதில், "இந்த திட்டத்தில் இப்போதைக்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது... ஓய்வூதிய தொகையை உயர்த்த அரசு இப்போது எந்த திட்டத்திலும் இல்லை..
காரணம், ஓய்வூதியத் தொகையை உயர்த்தினால், அதற்கேற்ற வகையில் உறுப்பினர்கள் செலுத்தும் சந்தா தொகையும் உயர்த்த வேண்டிய நிலை வரும். இதனால் திட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.. எனவேதான் ஓய்வூதியத் தொகையிலும், அதனுடன் தொடர்புடைய சந்தா தொகையிலும் எந்த உயர்வும் செய்ய அரசுக்கு இப்போது எண்ணம் இல்லை" என்றார்.
அடல் ஓய்வூதியத் திட்டம்
பிறகு ஒழுங்கமைக்கப்படாத துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையில், ஓய்வூதிய தொகையை மாற்றுவது, சந்தா முறையை புதுப்பிப்பது அல்லது பணவீக்கத்துடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்கிறதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர், தற்சமயம் அப்படியொரு எந்த மாற்றத்தையும் அரசு மேற்கொள்ளவில்லை, இப்போதுள்ள அடல் ஓய்வூதியத் திட்டமே தொடரும்" என்று பதிலளித்தார்.ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் திட்டம் இல்லாததால், இந்தத் திட்டத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு கூடுதல் செலவு அல்லது நிதிச் சுமை ஏற்படாது என்பதையும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்..!!












Click it and Unblock the Notifications