15 நாளில்.. இனி ரொம்ப ரொம்ப ஈஸி.. பட்டா மாறுதலில் புதிய நடைமுறை.. அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
சென்னை: தானியங்கி பட்டா மாறுதலை எளிமைப்படுத்தும் விதமான புதிய நடைமுறைகள் 15 நாட்களில் அமலாகும் என்று வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சொத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் முடிவுற்றதும், வில்லங்கங்கள் ஏதும் இல்லையென்றால் அதை வாங்குபவரின் பெயருக்கு தானியங்கி முறையில் இணையவழியில் பட்டா மாறுதல் செய்து தரப்படுகிறது.
இதுகுறித்து வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கையில், "பட்டாவை விரைந்து வழங்கும் வகையில், உட்பிரிவு இல்லாத சொத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் முடிவுற்றதும், விற்பனை செய்பவரின் பெயர், புல எண் மற்றும் பரப்பளவு ஆகியவை இணையதள பட்டாவில் உள்ள பெயர் மற்றும் இதர விவரங்களுடன் ஒன்றாக இருந்து, வில்லங்கங்கள் ஏதும் அந்தச் சொத்தின் மீது இல்லாதிருப்பின் அதை வாங்குபவரின் பெயருக்கு தானியங்கி முறையில் இணையவழியில் பட்டா மாறுதல் செய்து தரப்படுகிறது.

தற்போது அமல்படுத்தப்பட்டு வரும் இந்த நடைமுறையில் சில குறைபாடுகளைக் களைந்து, உட்பிரிவு இல்லாத சொத்தை வாங்கியவரின் பெயருக்கு தானியங்கி பட்டா மாறுதல் சேவையை எளிமைப்படுத்துவதற்காக சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி இனி நிலத்தை விற்கும்போது நில உரிமையாளர் (பட்டாதாரர்) மற்றும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் போன்ற குடும்ப உறுப்பினர்கள் கையொப்பமிடும் நிகழ்வுகளிலும் இனி இந்தச் சேவையை பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.
அதேபோல், ஒரு பட்டாதாரர் நிலத்தை பொது அதிகார முகவர் (Power of Attorney) மூலமாக பதிவு செய்யும்போது, விற்பனை செய்பவரின் பெயருக்கும், பட்டாதாரரின் பெயருக்கும் பொருத்தம் இல்லாமல் இருந்தாலும், செல்லத்தக்க பொது அதிகார முகவர் (valid Power of Attorney) என்பதன் அடிப்படையில் தற்போது இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், நிலத்தை வாங்குபவருக்கு அதே வருவாய் கிராமத்தில் ஏதேனும் நிலம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவருக்கு தானாகவே கடைசி பட்டா எண்ணுக்கு அடுத்த பட்டா எண் ஒதுக்கப்படும். இதன் மூலம் காலவிரயம் குறையும்.
இந்த புதிய நடைமுறை தானியங்கி பட்டா மாறுதல் சாஃப்ட்வேரில் திருத்தங்கள் செய்து 15 நாட்களுக்குள் அமல்படுத்தப்படும். இதன்மூலம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் உட்பிரிவு அல்லாத இனங்களில் தானியங்கி முறையில் பெருவாரியான பட்டாக்கள் மாறுதல் செய்யப்படும்.
இதனால் பொதுமக்கள் நிலத்தை பதிவு செய்த பிறகு பட்டா மாறுதல் தொடர்பாக சார்-பதிவாளர் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்துக்கோ நேரில் செல்லும் நிலை தவிர்க்கப்படுகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications