மைலேஜ் குறையுது.. E20 பெட்ரோலில் எத்தனால் கலப்புக்கு எதிர்ப்பு! டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை போராட்டம்
சென்னை: எரிபொருளை மிச்சப்படுத்தும் வகையில் பெட்ரோலில் எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. முதலில் எத்தனால் அளவு 10% ஆக இருந்த நிலையில், இப்போது அது 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எத்தனால் கலப்பதை அதிகரிப்பதால் பழைய வாகனங்கள் சேதமடையக்கூடும் என்றும் எரிபொருள் திறன் குறையக்கூடும் என்று வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் இது குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்திற்கு தொழில் அதிபரும் தொலைக்காட்சி பிரபலமுமான டீஷன் பூன்வவாலா அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை டெல்லியில் போராட்டம்
நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் பிற்பகல் 2 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும் என்று டீஷன் பூனவாலா கூறினார். ஒருவேளை போராட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி தராவிட்டால் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி இல்லம் முன்பாக போராட்டம், தர்ணாவில் ஈடுபடுவோம் என்று எச்சரித்துள்ளார். டீம் பாரத் என்ற கோஷத்துடன் எத்தனால் முறைகேட்டுக்கு எதிரான இந்த போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.
என்ஜின் பழுதடைவதாக
மத்திய பாஜக அரசின் எத்தனால் கலப்பு கொள்கையை அவசர அவசரமாக அமல்படுத்தியதற்கு எதிராக நடைபெறும் முதல் மிகப்பெரிய மக்கள் போராட்டம் இதுவாகும் என்று போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர். பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் வாகனங்களின் மைலேஜ் பாதிக்கப்படுவதாகவும் என்ஜின் பழுதடைவதாகவும் சமூக வலைத்தளங்க்ளில் நுகர்வோர் தரப்பில் இருந்து விவாதங்கள் அதிகரித்தன.
ஹேஷ்டேக்குகளும் போட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வந்த நிலையில், முதல் முறையாக வீதிக்கு வந்த போராடவும் மக்கள் தயாராகிவிட்டதாக போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தரப்பில் கூறப்பட்டது. எத்தனால் கலப்பு காரணமாக வாகனங்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தாலும் இதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள்
E-20 எரிபொருள் பாதுகாப்பானது. 20% எத்தனால் கலப்பு முறையைச் சோதித்துப் பார்க்க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன் முடிவுகள் அடுத்த ஆண்டுக்குள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலுடன் எத்தனால் 20 சதவீதம் கலப்பதன் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டு இருப்பதாகவும் 1.4 லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலவாணி சேமிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் எத்தனால் கலப்பை 30 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு டார்கெட் வைத்துள்ளது.














Click it and Unblock the Notifications