சிவாஜி கணேசன் வீட்டு யானை தந்தத்திற்கு பர்மிஷன் இருக்கிறதா? திமுக செந்தில் குமாருக்கு வந்த சந்தேகம்
சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டில் யானை தந்தம் வைத்திருப்பதற்கு வனத்துறையிடம் இருந்து முறையான அனுமதி பெறப்பட்டதா என்றும் அப்படி பெறாவிட்டால் அது சட்டவிரோதம் என்றும் திமுக முன்னாள் எம்பி டாக்டர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
சிவாஜி கணேசனின் இல்லத்தில் நடிகர் பிரபுவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அங்கு முகப்பில் இருந்த யானை தந்தம் குறித்து செந்தில்குமார் இத்தகைய கேள்வியை எழுப்பியுள்ளார்.

அதிமுகவில் இருந்த ஜேசிடி பிரபாகர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஓபிஎஸ்ஸின் ஆதரவாளராக இருந்தார். இரு அணிகளும் ஒன்றிணைந்து பிறகு ஒற்றை தலைமைக்கான பிரச்சினையின் போதும் ஓபிஎஸ் பக்கமே அவர் இருந்தார்.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்தோ ஓபிஎஸ் எந்த நடவடிக்கையையும் எடுக்காததாலும் அவர் திமுகவில் இணைந்துவிட்டதாலும் ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.
அவருக்கு கடந்த தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த தொகுதியில் அவர் வெற்றி பெற்ற நிலையில் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் இன்றைய தினம் தெற்கு போக் சாலையில் உள்ள சிவாஜி கணேசன் வீட்டில் நடிகர் பிரபுவை ஜேசிடி பிரபாகர் சந்தித்தார்.
அவருடன் சந்தித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீண்டகால குடும்ப நண்பரும், ஆயிரம் விளக்கு தொகுதி வாக்காளருமான அன்புச் சகோதரர், நடிகர் திரு. பிரபு அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து, மனம் திறந்து கலந்துரையாடி, மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட இனிய தருணம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களில் சிவாஜியின் புகைப்படம் அருகே இரு யானை தந்தங்கள் இருக்கின்றன. இதுகுறித்துதான் திமுக முன்னாள் எம்பி செந்தில் குமார் புதிய புயலை கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் யானை தந்தம் வைத்திருப்பது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 இன் கீழ் ஒரு கடுமையான குற்றம்.
கடந்த காலங்களில் அரசாங்கம் வழங்கிய குறிப்பிட்ட பொது மன்னிப்பு கால அவகாசங்களின் போது தங்களிடம் உள்ள யானை தந்தம் குறித்த விவரங்களை அரசிடம் முறையாகத் தெரிவித்து பிரகடனம் செய்திருக்க வேண்டும்.
Possession of Elephant ivory tusk is in India is a serious crime,
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) July 4, 2026
Under Wild Life (Protection) Act,1972
Only legal if declared item to Govt during specific past amnesty windows & has Certificate of Ownership issued under Section42
If not classified as state property/contraband https://t.co/XpQVe2MVnJ
அப்படி பிரகடனம் செய்யப்பட்டிருந்தால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 42 இன் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே யானை தந்தத்தை வைத்திருப்பது சட்டம் விரோதமாகாது.
ஒரு வேளை யானை தந்தத்திற்கான சட்டப்பூர்வ சான்றுகள் இல்லாவிட்டால் அது அரசின் சொத்தாகவும் அல்லது கடத்தல் பொருளாகவும் கருதப்பட்டு அரசால் பறிமுதல் செய்யப்படும் என செந்தில் குமார் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications