தவெகவில் இணைந்தார் வைகைச் செல்வன்! எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு விஜய்தான் என புகழாரம்
சென்னை: அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், தவெகவில் இணைந்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழகத்தில் தகுதியுடைய தலைவர் விஜய் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பனையூர் தவெக அலுவலகத்தில் இன்றைய தினம் ஏராளமானோர் தவெகவில் இணைந்தனர். இந்த நிகழ்வுக்கு முதல்வர் விஜய் சென்றிருந்தார். அப்போது ஏற்கெனவே அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து விலகிய வைகைச்செல்வனும் தவெகவில் இணைந்தார். முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் எம்ஜிஆர் போன்று காலத்தின் கட்டாயம் விஜய். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழகத்தில் தகுதியுடைய தலைவராக விஜய் இருக்கிறார்.
அதிமுகவில் இருந்து மனவேதனையுடன் பிரிந்தோம். எங்களிடம் விஜய் எளிமையாக அன்பாக பாசமாக பேசினார். அதனால்தான் இன்று ஏராளமானோர் தவெகவை நோக்கி வருகிறார்கள்.
அதிமுகவின் நூற்றாண்டு எதிர்காலம் என்பது காலம் கடந்துவிட்ட ஒன்று. மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்தால் எடப்பாடி பழனிசாமி மீது எப்படி நம்பிக்கை இருக்கும் என வைகைச் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் எங்களிடம் ஏதாவது கருத்துகள் இருந்தால் கூறுங்கள் என்றார், மேகதாது அணை குறித்தும் சில விஷயங்களை என்னிடம் கேட்டார் என்று வைகைச்செல்வன் தெரிவித்தார்.
வைகைச் செல்வன் அதிமுகவில் இருந்து விலகல் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் கூறியிருந்ததாவது: வணக்கம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இயக்கமும், கழகத் தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை.
திமுகவோடு இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதன் மூலம், திமுக எதிர்ப்பு நிலையில் இருந்து அதிமுக சமரச போக்கில் போனதால் தனது அடையாளத்தை இழந்து விட்டது. சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பதன் காரணமாகவும், தனது வெற்றிப் பாதையில் இருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது. மேலும், தேர்தல் களத்தில் நான் தனித்து விடப்பட்ட நிலையிலும் கூட, கழகத்திற்காக தேர்தல் பரப்புரையாற்றினேன். ஆனால், மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
"ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று..." மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதைவிட, அவ்வாறு செய்யாததால் கெட்டான் என சொல்லப்படுதல் நன்று என்கிற வள்ளுவரின் வார்த்தைகளுக்கு நான் கீழ் படிகிறேன்.
மாணவப் பருவம் தொட்டு ரத்தமும், சதையுமாக இருந்து இந்த இயக்கத்தோடு பணியாற்றி தற்போது விலக வேண்டிய சூழ்நிலையை எண்ணிப் பார்க்கையில், என் மனதில் ஏற்படும் கடுமையான வலியை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை. நேரம் வருகிற போது இன்னும் இதுகுறித்து பேசுகிறேன். 'புதிய இடத்தில் நடுவதற்கு புடுங்கிப் போன செடியில் இருக்கும் பழைய மண்ணைப் போல' இந்த இயக்கத்திற்காக ஆற்றிய என் பழைய நினைவுகளை என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications